துபாயில் சிதறிய தேஜஸ் போர் விமானம்; விபத்தின் மர்மத்தை உடைக்கும் ‘கறுப்பு பெட்டி’ அதிரடி மீட்பு: பதிவான தரவுகளை ஆய்வு செய்யும் பணி தீவிரம்
புதுடெல்லி: துபாய் விமான சாகசத்தின்போது விபத்துக்குள்ளான தேஜஸ் விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு, விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நேற்று நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சியில், சாகச நிகழ்ச்சியின்போது இந்தியாவின் ‘தேஜஸ்’ விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதித் தீப்பற்றி எரிந்தது. பார்வையாளர்கள் கண்முன்னே நடந்த இந்த கோர விபத்தில், விமானத்தை இயக்கிய இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் நமன் சியால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விமானம் மேலே எழும்பிய சிறிது நேரத்திலேயே செங்குத்தாகத் தரையில் விழுந்து நொறுங்கியதாகவும், கரும்புகை வானில் சூழ்ந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பாதுகாப்புத்துறை நிபுணரும், ஓய்வுபெற்ற கேப்டனுமான அனில் கவுர் ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘விமான சாகச நிகழ்வின்போது புவி ஈர்ப்பு விசை அதிகரிப்பால் விமானிக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். பொதுவாக விமானிகள் அணியும் ஜி-சூட் உடையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருந்தாலும் இந்நிலை உருவாகும். இருப்பினும் காக்பிட் தரவுகளை மீட்டெடுத்த பிறகே விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும். எனவே விமானி தனது கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கான காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. துணிச்சலான விமானியை இழந்தது வேதனையளிக்கிறது’ என்று குறிப்பிட்டார். விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் நமன் சியால் மறைவுக்கு இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
விமான விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு அல்லது இயந்திரக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடந்த பாகங்களை ஆய்வு செய்த மீட்புக் குழுவினர், விமானத்தின் மிக முக்கியப் பாகமான ‘கறுப்புப் பெட்டி’யை வெற்றிகரமாக மீட்டுள்ளனர். விமானத்தின் இயக்கத் தரவுகளைப் பதிவு செய்யும் கருவி (எப்டிஆர்) மற்றும் ‘காக்பிட்’ குரல் பதிவு கருவி (சிவிஆர்) ஆகியவை இதில் அடங்கும். இந்த இரண்டு கருவிகளும் விபத்து நடப்பதற்கு முந்தைய நொடி வரை விமானத்தில் என்ன நடந்தது, பைலட் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு இடையே நடந்த உரையாடல்கள் என்ன என்பதைத் துல்லியமாகத் தெரிவிக்கக்கூடியவை என்பதால், விசாரணையில் இது முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டியில் பதிவாகியுள்ள தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் பணியை நிபுணர்கள் குழு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. சாகசத்தின்போது உருவான அதிகப்படியான புவி ஈர்ப்பு விசையால் விமானிக்கு ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்திருக்கலாம் அல்லது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இருப்பினும், ‘கறுப்புப் பெட்டியில் உள்ள தரவுகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்’ என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீவிர விசாரணை முடிவடைந்து இறுதி அறிக்கை எப்போது வெளியாகும் என்பது குறித்த காலக்கெடு எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது போன்ற நுட்பமான விபத்துகளில் முழுமையான ஆய்வுப் பணிகள் நிறைவடையச் சிறிது காலம் ஆகக்கூடும் என்பதால், ஆய்வு முடிவுகள் வந்தவுடன் விபத்துக்கான முழு பின்னணியும் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை வெளியாகும் தகவல்கள் அனைத்தும் யூகங்களே என்றும், அதிகாரப்பூர்வ தகவலுக்காகக் காத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


