துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.11.5 கோடி தங்கம் பறிமுதல்: 2 ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது
மீனம்பாக்கம்: துபாயிலிருந்து நேற்று சென்னை வந்திறங்கிய எமிரேட்ஸ் விமானத்தில் ரூ.11.5 கோடி மதிப்பிலான தங்க பேஸ்ட்டுகள் கடத்தி வந்த 2 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 5 பேரையும் சுங்கத்துறை இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். துபாயிலிருந்து நேற்று காலை சென்னை விமானநிலையம் வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கினர். கடைசியாக விமான ஆண், பெண் பணியார்கள் இறங்கி வந்தனர். இதில் 2 ஆண் பணியாளர்மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடல் பரிசோதனையின்போது, அவர்களின் இடுப்பு, மார்பு உள்பட பல்வேறு இடங்களில் வெல்க்ரோ ஸ்டிக்கர் பேண்டுகளை ஒட்டியிருப்பது தெரியவந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது, வெள்ளை காகிதத்தில் சுற்றப்பட்ட 10 பார்சல்களில் தங்க பேஸ்ட்டுகள் மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. ரூ.11.5 கோடி மதிப்பிலான 24 கேரட் 9 கிலோ 460 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, பிடிபட்ட 2 ஆண் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இதே விமானத்தில் பயணம் செய்த சென்னை பயணி ஒருவர், துபாயில் இவர்களிடம் விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன் இத்தங்க பேஸ்டுகளை கொடுத்து சென்னைக்கு கடத்தி வரச்சொன்னதாகவும், இதனால் அவர்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இவர்கள் துபாயில் வசித்து வரும் இந்தியர்கள். நேற்று சென்னை விமானத்தில் பணிக்கு வந்து, விமான நிலையம் அருகே நட்சத்திர ஓட்டலில் தங்கிவிட்டு, இன்று துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணி நிமித்தமாக துபாய்க்கு செல்கின்றனர் என்பதும் தெரியவந்தது.
இந்த 2 ஆண் ஊழியர்களிடம் விசாரணையின்போது, விமானநிலையம் அருகே இவர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டலில், இவர்களிடம் துபாயில் தங்கத்தை கொடுத்த பயணி மற்றும் தங்கத்தை வாங்க வரும் 2 பேர் பெற்று செல்லத் திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நட்சத்திர ஓட்டலுக்கு அதிகாரிகள் சென்று, அங்கு தங்கியிருந்த பயணி மற்றும் தங்கத்தை வாங்க வந்த சென்னையை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 3 பேரையும் கைது செய்தனர்.
துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.11.5 கோடி மதிப்பிலான தங்க பேஸ்டுகள் கடத்தி வந்தது தொடர்பாக 2 விமான ஆண் ஊழியர்கள் உள்பட 5 பேர்மீது வழக்கு தொடரப்பட்டது. இன்று காலை சென்னையில் உள்ள சுங்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களை விரைவில் காவலில் எடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.


