சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் திடீரென நெஞ்சுவலி காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவர் சுந்தரேசன். இவர் தனக்கு வழங்கப்பட்ட வாகனத்தை உயர் அதிகாரிகள் பறித்து விட்டதாக, காவல்துறை சட்டத்திற்கு எதிராக பொது வெளியில், நிருபர்களிடம் பேட்டியளித்தார். இதையடுத்து டிஎஸ்பி சுந்தரேசன் மீது துறை ரீதியான நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் சுந்தரேசன் இன்று காலை திடீரென நெஞ்சுவலி காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார். அதேநேரம் டிஎஸ்பி சுந்தரேசனிடம் பணியின் போது ஒழுங்கீனமாக நடந்தது குறித்து அவரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென நெஞ்சுவலி என மருத்துவமனையில் சேர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.