*சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு
திருமலை : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து காக்கிநாடா நோக்கி லாரி ஒன்று புறப்பட்டது. வேம்பாடு நெடுஞ்சாலை டோல்கேட் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி டோல்கேட் டிக்கெட் கவுன்டர் மீது மோதியது. தொடர்ந்து லாரி நிற்காமல் அடுத்த கவுன்டர் மீதும் மோதியது. இந்த விபத்தில் கவுன்டர்கள் சேதமானது.
மேலும் லாரியின் முன்புற சக்கரங்கள் தனியாக கழன்று ஓடியது. டிக்கெட் கவுன்டர் மீது லாரி மோதியபோது, உள்ளே யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் விபத்து ஏற்பட்டபோது அருகில் இருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடினர். டிரைவர் லேசான காயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகப்பள்ளி போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். டிரைவர் மதுபோதையில் லாரியை ஓட்டியதால் விபத்து நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.