சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையால் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 14,365 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போதை பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதை பொருள் தடுப்பு அமலாக்கப் பணியகம் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக மொத்தம் 9,736 வழக்குகள் போதை பொருள் தடுப்பு அமலாக்கப் பணியகம் பதிவு செய்து, சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் உள்பட மொத்தம் 14,365 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த 21 ஆயிரத்து 72 கிலோ கஞ்சா, 222 கிலோ மெத்தாபெட்டமின், கொக்கைன் உள்ளிட்ட பிற போதை பொருட்கள், 1.92 லட்சம் போதை மாத்திரைகள் என மொத்தம் ரூ.23.29 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர ரூ.55.61 கோடி மதிப்புள்ள மயக்க மருந்துகள் மற்றும் மன அழுத்தம் உண்டாக்கும் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், போதை பொருள் கடத்த பயன்படுத்திய கார், சரக்கு வாகனம், இருசக்கர வாகனம் என மொத்தம் 178 வாகனங்கள் ரூ.93.20 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போதை பொருளுக்கு எதிராக சட்டம் -ஒழுங்கு போலீசாருடன் இணைந்து போதை பொருள் தடுப்பு அமலாக்கப் பணியகம் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர்.
* சிறந்த குறும்படம், ரீல்ஸ்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு
பொதுமக்களிடையே போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை பொருள் தடுப்பு அமலாக்கப் பணியகம் சிறந்த விழிப்புணர்வு குறும்படம் மற்றும் சிறந்த ரீல்ஸ் வீடியோவுக்கான போட்டி நடத்தியது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தயாரித்த 115 குறும்படங்கள், ரீல்ஸ் வீடியோக்கள் காட்சி படுத்தப்பட்டது.
அதில், திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ரூ.1 லட்சத்திற்கான முதல் பரிசை பெற்றது, ரூ.50 ஆயிரத்திற்கான இரண்டாம் பரிசை நாமக்கல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவி பெற்றார். ரூ.25 ஆயிரத்திற்கான பரிசை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பெற்றது. இந்த பரிசு தொகையை போதை பொருள் தடுப்பு அமலாக்கப் பணியகம் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் வழங்கினார். அப்போது, ஐஜி செந்தில்குமாரி, எஸ்பி மதிவாணன் உடனிருந்தனர்.
