மியாமி: கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக, போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத நாடுகள் பட்டியலில் நட்பு நாடான கொலம்பியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் சேர்த்துள்ளார். போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து நிதி உதவிகளை பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாடுகளை அமெரிக்க அரசு பட்டியலிடும்.
இந்த ஆண்டு, அமெரிக்காவின் மிகவும் நெருங்கிய நட்பு நாடான கொலம்பியா சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இணங்காத நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 1997ம் ஆண்டு இப்பட்டியலில் கொலம்பியா சேர்க்கப்பட்டது. அப்போதைய அதிபர் எர்னஸ்டோ சாம்பர் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் பணம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் பரவலாக இருந்தன. தற்போதைய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவின் ஆட்சியில் கோகோ பயிர்களை கைமுறையாக ஒழிப்பது 5,048 ஹெக்டேராக கணிசமான அளவு குறைந்துள்ளது.
இது அரசின் இலக்கான 30,000 ஹெக்டேரை விட மிக குறைவு. தென் அமெரிக்க நாடான கொலம்பியா, கொகைன் போதைப் பொருள் தயாரிப்பின் முக்கிய மூலப்பொருளான கோகோ சாகுபடியில் உலகின் முதன்மையான நாடாக திகழ்கிறது. போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக்கு இணங்காத நாடாக அறிவிக்கப்பட்டதால் கிராமப்புறங்களில் பாதுகாப்பை மீட்பதற்கான பல்வேறு நிதி உதவிகளை அமெரிக்கா நிறுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.