படிக்க சென்ற இடத்தில் போதை வழக்கில் கைது: ‘ரஷ்யாவுக்கு திரும்புவதை விட சிறையே மேல்’: உக்ரைனிடம் சரணடைந்த இந்தியரால் பரபரப்பு
புதுடெல்லி: சிறைத் தண்டனையிலிருந்து தப்பிக்க ரஷ்ய ராணுவத்தில் இணைந்த இந்திய இளைஞர், உக்ரைன் படையிடம் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்ந்து வருவது தொடர்பான செய்திகள் அடிக்கடி வருகின்றன. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ரஷ்யாவிடம் பலமுறை ஆட்சேபனை தெரிவித்துள்ளதுடன், இந்தியர்கள் இதுபோன்ற தவறான வலையில் சிக்க வேண்டாம் எனவும் எச்சரித்து வருகிறது.
இதுவரை ரஷ்யாவுக்காகப் போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 96 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. மேலும் 27 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த மஜோதி சாஹில் முகமது ஹுசைன் (22) என்ற இந்தியர், ரஷ்யாவுக்காகப் போரிட்ட நிலையில், உக்ரைன் படையிடம் சரணடைந்துள்ளார்.
ரஷ்யாவில் படிக்கச் சென்ற இவர், போதைப் பொருள் வழக்கில் சிக்கி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். தண்டனையிலிருந்து தப்பிக்க, ராணுவத்தில் சேர ஒப்புக்கொண்டுள்ளார். 16 நாட்கள் பயிற்சியைத் தொடர்ந்து, கடந்த 1ம் தேதி போர்க்களத்திற்கு அனுப்பப்பட்ட இவர், தனது தளபதியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வெறும் மூன்று நாட்களில் உக்ரைன் படையிடம் சரணடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘நான் சண்டையிட விரும்பவில்லை. எனக்கு ஊதியமாக 1.5 மில்லியன் ரூபிள் தருவதாகக் கூறினார்கள், ஆனால் எந்தப் பணமும் தரவில்லை. ரஷ்யாவுக்குத் திரும்பிச் செல்வதை விட உக்ரைன் சிறையிலேயே இருந்து விடுகிறேன். அங்கே உண்மை என்பதே இல்லை’ என்று வேதனையுடன் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து உக்ரைன் அதிகாரிகளிடமிருந்து முறையான தகவல் எதுவும் வரவில்லை என்றும், இதுகுறித்த தகவல்களை சரிபார்த்து வருவதாகவும் டெல்லியில் உள்ள ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.