ஐக்கிய நாடுகள் சபை: நியூயார்க்கில் ஐநா பொதுச்சபையின் வருடாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் கஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்காவின் போதைப் பொருள் தடுப்பு பணிகளை கடுமையாக விமர்சித்தார். மேலும், நியூயார்க்கில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற அவர் அதிபர் டிரம்ப் சொல்வதை ராணுவ வீரர்கள் கேட்கக் கூடாது என பேசினார்.
இதன் காரணமாக பெட்ரோவின் விசாவை அமெரிக்கா ரத்து செய்தது. இந்நிலையில், நியூயார்க்கில் நடந்து வரும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கொலம்பியா அதிபர் பெட்ரோவுக்கு அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.
வால்ட்ஸ் பேசுகையில், ‘‘சமீபத்திய மாதங்களில், போதைப்பொருள் பயங்கரவாத கும்பல்கள் கொலம்பிய பாதுகாப்புப் படைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இது கொலம்பியா அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. எனவே கொலம்பியா அதிபர் போதைப் பொருள் கடத்தல்காரர்களை பாதுகாப்பை விட்டு, இந்த அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க முன்வர வேண்டும்’’ என்றார்.