சென்னை: சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு சென்னையில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி குற்றவாளிகளையும், வலைப்பின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கைது செய்து வருகிறது. அதன்படி, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் மற்றும் வானகரம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் செப்டம்பர் 18ம் தேதி போரூர் டோல்கேட் சர்வீஸ் ரோட்டில் கண்காணித்தனர்.
அங்கு போதைப்பொருள் வைத்திருந்த 36 வயதான சரண்ராஜ், 23 வயதான ரெக்ஷித் ரெக்ஜின்மோன், 27 வயதான ஜமூனா குமாரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13 கிராம் மெத்தம்பெட்டமின், 150 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் செப்டம்பர் 21ம் தேதி தலைமறைவாக இருந்த 38 வயதான பவன்குமார், 30 வயதான ஹாசிக் பாஷா, 42 வயதான ஆறுமுகம், 35 வயதான பிரபாகரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து5 கிராம் மெத்தம்பெட்டமின், 12 எம்டிஎம்ஏ மாத்திரைகள், 2 செல்போன்கள் மற்றும் சிறிய எடை இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கோவூரைச் சேர்ந்த 36 வயதான மணிகண்டன் என்பவரை நவம்பர் 4ம் தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, வானகரம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில், இந்த வழக்கில் தொடர்புடைய சூடான் நாட்டைச் சேர்ந்த 24 வயதான மொஹந்த் மோவியா அப்துல் ரஹ்மான் அல்டீராப்ஸ் மற்றும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 27 வயதான நாஜி லோடச்சுக்வு இம்மானுவேல் ஆகிய இருவரையும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று செல்போன்கள் மற்றும் ரூபாய் 1 லட்சத்து 41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இரு வெளிநாட்டவர்களும் விசாரணைக்குப் பின்னர் இன்று டிசம்பர் 6ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.இதுவரை போதைப்பொருளுக்கு எதிரான சென்னை காவல் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் குழுவினரின் தொடர் நடவடிக்கையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 26 நபர்களும், கேமரூன் நாட்டைச் சேர்ந்த ஒருவரும், சூடான் நாட்டைச் சேர்ந்த இருவர் என 29 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


