திருமலை: வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது மோதிய காரில் சிக்கிய பைக் அரை கி.மீ. தூரம் இழுத்துச்சென்றதால் தீப்பொறி பறந்தது. இதில் 4 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் அட்டாங்கி-நார்கெட்பள்ளி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் வேகமாகவும் தாறுமாறாகவும் சென்றது. அப்போது எதிரே வந்த பைக் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் நடந்து சென்றவர்கள் மீதும் கார் மோதியது. ஒரு பைக் காரின் அடியில் சிக்கி கொண்டது. அதில் வந்தவர் தூக்கி வீசப்பட்டார். அப்போதும் நிற்காத கார், பைக்கை இழுத்து சென்றது. இதனால் தீப்பொறி பறந்தது. இந்த சம்பவத்தில் 4பேர் காயமடைந்தனர். நரசராபேட்டையைச் சேர்ந்த ஒருவரின் கால் முற்றிலும் நசுங்கியது. காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இதற்கிடையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தாறுமாறாக சென்ற காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சிலர் பைக்குகளில் சுமார் அரை கி.மீ. தூரம் விரட்டிச்சென்று காரை தடுத்து நிறுத்தினர். வாகனத்தை ஓட்டிய வாலிபரை பிடித்தனர். அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசாரிடம் பிடித்து வைத்திருந்த வாலிபரை ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பிடுகுரல்லா ஐயப்பா நகரைச் சேர்ந்த சைதா வலி (25) என்பதும் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சைதாவலியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.