திருவள்ளூர் அருகே போதை பொருள் கடத்தல் வழக்கில் சென்னையை சேர்ந்த மேலும் ஒருவர் கைது: 55 கிராம் மெத்தபெட்டமைன் 40 போதை மாத்திரை பறிமுதல்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் சென்னையை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரிடமிருந்து 55 கிராம் மெத்த பெட்டமைன் மற்றும் 40 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தி வந்த முன்னீர் (28), ஜாவேத் (38) ஆகிய 2 பேரையும் கடந்த அக்.16ம்தேதி மணவாளநகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 55 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து கடந்த அக்.23ம்தேதி சென்னையை சேர்ந்த கூட்டாளியான டான்சர் சிபிராஜ் (25) என்பவரிடம் 54 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர் கொடுத்த தகவலின்பேரில், நாமக்கல்லில் வசித்து வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த மைக்மேல் நம்நடி (43), சென்னையில் வசித்து வந்த காங்கோ நாட்டை சேர்ந்த கபிதா யானிக் திஷிம்போ (36) ஆகிய 2 பேரை கடந்த அக். 30ம்தேதி போலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவனான செனெகல் நாட்டை சேர்ந்த பெண்டே (43) என்பவரை சிறப்பு படை போலீசார் கடந்த 8ம்தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து பல சிம்கார்டுகள், போலி அடையாள அட்டைகள் மற்றும் வணிக கடைகள் மூலம் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனைகள் செய்திருந்ததை கண்டுபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்டேவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு திருவள்ளூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் செனெகல் நாட்டை சேர்ந்த பெண்டே அளித்த தகவலின் பேரில் போலீசார், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த மதின் அகமது என்பவரை நேற்று கைது செய்து அவரிடமிருந்து 55 கிராம் மெத்த பெட்டமைன் மற்றும் 40 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் யார், யாருக்கெல்லாம் போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளார் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். பின்னர் அவரை, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர். மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


