மதுரவாயலில் போதை ஊசி போட்ட ஆட்டோ டிரைவருக்கு வாந்தி, மயக்கம்: கல்லூரி மாணவன் கைது: 200 மாத்திரை, 8 ஊசி பறிமுதல்
பூந்தமல்லி: மதுரவாயலில் போதை ஊசி போட்ட ஆட்டோ டிரைவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போதை மாத்திரை மற்றும் ஊசி விற்ற கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 200 மாத்திரைகள், 8 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மதுரவாயல் ஆண்டாள்நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (22). கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பார்மஸி 4ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், சூரத்தில் இருந்து ஆன்லைன் மூலம் போதை மாத்திரை, ஊசிகளை ஆர்டர் செய்து சென்னைக்கு வரவழைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில், இவரது நண்பரான மதுரவாயல் ஆலப்பாக்கம் கணபதி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் என்பவர், கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனக்கு அடிக்கடி தலைவலிப்பதாக கூறியுள்ளார். தலைவலிக்கு தன்னிடம் மருந்து இருப்பதாக கூறி, முத்துக்குமாரை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், தன்னிடம் இருந்த போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றி முத்துக்குமாருக்கு செலுத்தியுள்ளார். ஊசி போட்ட சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முத்துக்குமாரை அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
போதை மாத்திரை, போதை ஊசி விற்பது குறித்து அப்பகுதி மக்கள் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து போதை மாத்திரை, போதை ஊசி விற்பனை செய்து வந்த ஹரிபிரசாத்தை நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிமாநிலங்களில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து அவற்றை மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மாத்திரை ரூ.300 வீதம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து 200 போதை மாத்திரைகள், 8 போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், ஹரிபிரசாத்தை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்றது, ஆட்டோ டிரைவருக்கு போதை ஊசி போட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.