சென்னை: போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை பதிவுசெய்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவருடம் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றுள்ளது.
கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே நுங்கம்பாக்கம் போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா அகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
இது தொடர்பாக நடிகர் கிருஷ்ணா ஏற்கனவே ஆஜராகி விளக்கமளித்தார். நடிகர் ஸ்ரீகாந்த் தவிர்க்க முடியாத காரணத்தால் அக்டோபர் 28-ம் தேதி ஆஜராக முடியவில்லை என தனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
