Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘‘2வது மனைவி புகாரில் கைது செய்வார்கள்’’ என்ற அச்சத்தில் உடலை பிளேடால் சரமாரி அறுத்துக் கொண்டு சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்ட டிரைவர்: போலீசாருக்கு சவால்விட்டதால் பரபரப்பு

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(47). இவர் டிரைவர். இவரது 2வது மனைவி பாத்திமா (45). இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் ஜெ.ஜெ.நகர் காவல்நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி புகார் கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு; பாத்திமா கொடுத்துள்ள புகாரில், ‘’எனது 2வது கணவர் கோபாலகிருஷ்ணன் என் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்வதுடன் சித்ரவதை செய்துவருகிறார். சம்பவத்தன்று கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது நடுரோட்டில் என்னை மறித்து சரமாரியாக தாக்கினார்.எனவே, கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரில்,’’என் மனைவி மீது சந்தேகம் உள்ளது’ என்று தெரிவித்தார். இதுசம்பந்தமாக போலீசார் விசாரித்தபோது மதுபோதையில் இருந்த கோபாலகிருஷ்ணன் திடீரென காவல் நிலையத்தில் கீழே விழுந்து உருண்டு புரண்டு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்து துடித்துள்ளார். இதையடுத்து தம்பதியை உடனடியாக ஒரு ஆட்டோவில் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் ஆட்டோவில் ஏறிய கோபாலகிருஷ்ணன் போலீசாரை பார்த்து, ‘’என் மீது எப்படி நடவடிக்கை எடுக்குறீங்க என்று பார்க்கிறேன்’’ என்று சவால் விட்டதுடன் ‘’உங்களை என்ன செய்கிறேன் பாருங்க’’ என்று ஆட்டோவில் வேகமாக சென்றுவிட்டார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் நடுரோட்டில் 4 போலீசார் தன்னை தாக்கியதாக கோபாலகிருஷ்ணன் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் கதறி அழுவதுபோல் சமூகவலைதள பக்கத்தில் வீடியோ வைரலாக பரவியது. இதை பார்த்ததும் போலீசார் உடனடியாக கோபாலகிருஷ்ணன் மனைவி பாத்திமாவுக்கு போன் செய்து விசாரித்தபோது, ‘’தனது கணவரே பிளேடால் தன்னைத்தான் அறுத்துக்கொண்டு போலீசார் மீது பழிபோடுகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவரும் கோபாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ‘’என் மீது மனைவி புகார் கொடுத்ததால் போலீசார் கைது செய்து விடுவார்கள்’’ என்ற பயத்தில் தனக்குத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இதன்பிறகு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கோபாலகிருஷ்ணன் நேராக ஜெ.ஜெ.நகர் காவல்நிலையம் சென்று இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறனிடம் ‘’என்னை மன்னித்து விடுங்கள். போலீசாரை பழிவாங்கும் நோக்கத்தில் தன்னைத்தானே பிளேடால் கிழித்துகொண்டேன்’ என்று தெரிவித்து அழுதுள்ளார். இன்ஸ்பெக்டர் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

கோபாலகிருஷ்ணன், நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு திருமணம் நடந்து குழந்தைகள் உள்ளது. முகப்பேர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கார் ஓட்டி வந்துள்ளார். அப்போது அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் வேலை செய்துவந்த பாத்திமாவுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2வது திருமணம் செய்து கடந்த 12 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். தற்போது அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் பிரச்னை உருவாகியுள்ளது. இவ்வாறு தெரியவந்துள்ளது.