பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஓட்டுநர் இல்லாத காரில் சாமியார் ஒருவர் பயணம் செய்த காணொலி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு, உத்தராதி மடத்தைச் சேர்ந்த சத்யாத்மதீர்த்த சுவாமிகள் கடந்த 27ம் தேதி வருகை தந்தார். அப்போது, கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் அவர் பயணம் மேற்கொண்டார்.
அந்த வாகனம் ஓட்டுநர் இன்றி தானாகவே வளாகத்தைச் சுற்றி மெதுவாகச் சென்றது. சாமியார் மற்றவர்களுடன் காருக்குள் வசதியாக அமர்ந்திருக்கும் காட்சிகள் அடங்கிய காணொலி, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் காணொலி, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
‘வைரின்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்மாதிரி காரை, விப்ரோ, இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஆர்.வி. பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. குறிப்பாக, குண்டும் குழியுமாக உள்ள இந்தியச் சாலைகள் உள்ளிட்ட சவாலான சூழல்களிலும் பயணிக்கக்கூடிய வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, இந்தியாவின் தானியங்கி வாகனங்களின் எதிர்காலம் குறித்த பெரும் விவாதத்தையும், ஆர்வத்தையும் இணையத்தில் தூண்டியுள்ளது.
