கோவில்பட்டி: கோவில்பட்டியில் காதல் தோல்வியால் ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் ரயில்வே பீடர் ரோடு நகரைச் சேர்ந்தவர் ரவிபாண்டியன் மகன் சக்தி கணேஷ் (20). இவர் ஆக்டிங் டிரைவர் மற்றும் கட்டிட வேலைகளுக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற சக்தி கணேஷ் இரவில் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் மந்தித்தோப்பு செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சக்தி கணேஷின் உடல் சிதறிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே சக்தி கணேஷ் தான் இறப்பதற்கு முன்பு நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ஒருவருக்கு பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், ‘சந்தோஷ்.. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் பார்ப்போம். உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் போன் போகவில்லை. எதுவும் நினைத்துக் கொள்ளாதே.. பார்ப்போம்.. எல்லாம் முடிந்துவிட்டது அவ்வளவுதான். நீ காலையில் போனை எடுத்துப் பார்க்கும்போது தனியார் கல்லூரி அருகே உள்ள தண்டவாளத்தில் இருப்பேன். என்னை வந்து பார்’ என்று பேசி சக்திகணேஷ் ஆடியோ அனுப்பியுள்ளார்.
காதல் தோல்வி காரணமாக கடந்த சில தினங்களாக மனம் உடைந்து காணப்பட்ட சக்தி கணேஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.