ரூ.66.78 கோடியில் குடிநீர் குழாய்கள் அமைப்பு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக 265 மி.லிட்டர் குடிநீர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்; அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ரூ.66.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பிரதான குடிநீர் குழாய்கள் மூலம் கூடுதலாக 265மி.லிட்டர் குடிநீர் விநியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து முழு கொள்ளளவான 530 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்குவதற்காக ரூ.66.78 கோடி மதிப்பீட்டில் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரை இரண்டாவது பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, முதல் பகுதி செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து போரூர் வரை 11.7 கி.மீ. நீளத்திற்கும், பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பிலிருந்து கோயம்பேடு வரை 9.2 கி.மீ. நீளத்திற்கும் இரண்டாவது பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி வழங்கப்படுவதால் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தின் முழு அளவான நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படும்.
செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தில் 265 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பு செய்யும் கூடுதல் மையத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் நிறைவடைந்த சுத்திகரிப்பு மையத்தை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், ‘265மி.லிட்டர் குடிநீர் விநியோகத்தை முதல்வர்மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இது ஆவடி, பூந்தமல்லி, மாங்காடு, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது’’ என்றார்.