Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மானாமதுரையில் நீரின்றி வறண்டுபோன குளங்கள்: விநாயகர் சிலைகளை கரைப்பதில் சிக்கல்

மானாமதுரை: மானாமதுரை பகுதியில் அமைந்துள்ள குளங்கள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. இதனால் விநாயகர் சிலைகளை கரைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சுமார் 39 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். விழா முடிவில் 5 அடி முதல் 10 அடி உயர சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மானாமதுரை நவத்தாவுரோட்டில் உள்ள அலங்காரக்குளத்தில் கரைக்கப்படும். அதே போல மானாமதுரை அருகே உள்ள கால்பிரவு, ராஜகம்பீரம், கல்குறிச்சி, ஆலங்குளம், உடைகுளம், செட்டிக்குளம் பகுதிகளிலும் வைத்து வழிபாடு செய்யப்படும் விநாயகர் சிலைகள் இங்கு கொண்டுவரப்பட்டு கரைக்கப்படும்.

இது தவிர சிப்காட் பெரிய கண்மாய், மூங்கில் ஊரணி உள்ளிட்ட நீர்நிலைகளில் வீடுகளில் வழிபடக்கூடிய சிறிய விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். தற்போது மானாமதுரை பகுதியில் குளங்கள், நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து சிலைகளை கரைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து மானாமதுரையை சேர்ந்த கண்ணன், அருண், முருகன் ஆகியோர் கூறுகையில், `ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாளில் சிலைகளை அலங்காரக்குளத்தில் கரைப்பது வழக்கம். இந்தாண்டு வீர அழகர் தீர்த்தவாரி உற்சவத்திற்கு அழகர், சக்கரத்தாழ்வார் திருமஞ்சனத்திற்கு தண்ணீர் இல்லாததால் பட்டத்தரசி கிராமத்தினர் டேங்கர் லாரிகளில் சிறிய பள்ளத்தில் தண்ணீர் நிரப்பி தீர்த்தவாரி உற்சவம் நடத்தினர்.

அலங்காரக்குளத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பெரிய விநாயகர் சிலைகளும், ஆயிரக்கணக்கான சிறிய சிலைகளும் கரைக்கப்படும். இந்த ஆண்டு குளங்கள், நீர்நிலைகள் வறண்டுள்ளதால் சிலைகளை எப்படி கரைப்பது என்று தெரியவில்லை. எனவே, இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.