Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழையையொட்டி அடையாறு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகள் தீவிரம்: நவீன இயந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரை அகற்றம்

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி அடையாறு முகத்துவார பகுதியில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்மாதம் இறுதிக்குள் ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே தொடங்கும் அடையாறு ஆறு 42.5 கிலோ மீட்டர் பயணித்து சென்னை பட்டினப்பாக்கம் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் பல்வேறு ஏரிகளின் உபரி நீர் மட்டுமின்றி சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளின் இருந்து கழிவுநீரும் கலந்து வருகிறது. அடையாறு ஆற்றை சீரமைப்பதற்கான பணிகள் சென்னை வெள்ள தடுப்பு அறக்கட்டளை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட 20 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அதிகமாக பதிவாகக்கூடும். தாழ்வுப்பகுதி, மண்டலம், புயல் என அடுத்தடுத்த நிகழ்வுகளால் இந்தாண்டு அதிக மழை பொழிவு ஆண்டாக இருக்கும். அதிலும் குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல்கள் உருவாகி குறுகிய காலத்தில் அதிகனமழை பெய்யக்கூடிய ஆண்டாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் அதிகளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அடையாறு ஆறு, முகத்துவார பகுதி மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து தூர்வாரும் பணிகளும் பருவமழைக்கு முன்கூட்டியே முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடையாறு முகத்துவாரத்தில் மணல் அதிகளவில் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே இருந்து வரும் குப்பை மற்றும் கழிவுகள் அடைப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இதனால் வெள்ள காலத்தில் மழைநீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை கொட்டி தீர்த்தபோது, அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. முகத்துவார அடைப்பால் வெள்ளநீர் வெளியேறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தென் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. மழை ஓய்ந்த பிறகே வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பயது. முகத்துவாரத்தில் ஏற்பட்ட அடைப்பும், மணல் திட்டுக்கல் மற்றும் காற்றினால் 7 அடி வரை எழுந்த அலைகளால் மழைநீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நீர்நிலைகள் மற்றும் முகத்துவாரங்களில் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை ஆண்டுதோறும் செய்து வருகிறது. அதன்படி அடையாறு முகத்துவார பகுதியில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நீர்வளத்துறை உயர் அதிகாரி கூறியதாவது: அடையாறு முகத்துவார பகுதியில் மணல் திட்டுக்கள், தாவரங்கள் அதிகளவில் உள்ளதால் அடையாறு வழியாக கடலுக்கு செல்ல வேண்டிய வெள்ள நீர் தடை ஏற்படுகிறது.

அடையாறு முகத்துவாரப் பகுதிகளில் 400 மீட்டர் தூரத்திற்கு கடல் மற்றும் ஆற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முகத்துவார பகுதி என்பதால் தொடர்ந்து மணல் திட்டுகள் அப்பகுதிகளில் படிவதால் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் என மழைக்காலங்களில் தொடர்ந்து தூர்வாரப்படும். இதற்காக ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாற்றில் ரூ.1.20 கோடியில் விமான நிலையம் முதல் முகத்துவாரம் வரை ஆகாயத்தாமரை அகற்றப்பட்டுள்ளது. குறிப்பாக சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான ஆகாயத்தாமரை அகற்றப்பட்டுள்ளது. இதில் சீனிவாசபுரம் பகுதியில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக ஏற்படும் அடைப்புகளை தூர்வாருவதற்காக தேசிய கடல் தொழிற்நுட்ப கல்வியியல் நிறுவனம் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்காக நவீன இயந்திரங்கள் உட்படுத்தப்பட்டள்ளது. தற்போது வரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் இம்மாதம் இறுதிக்குள் முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் திருவிகா பாலம் முதல் அடையாறு முகத்துவாரம் வரையிலான 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் பருவமழைக்கு முன்பு முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.