சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், திராவிட இயக்கத்தின் தீவிரப் பற்றாளருமான இரா.ரத்தினகிரி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் தலைவராகச் 20 ஆண்டுகாலம் பணியாற்றிய ரத்தினகிரி, பதினோராவது ஐந்தாண்டு திட்டக் குழுவின் உறுப்பினர், பால்வளத்துறை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள அகில இந்திய கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் செயலாளராகவும் 18 ஆண்டு பணியாற்றியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திராவிட இயக்க வரலாற்றை விவரிக்கும் ”கலைஞர் கருவூலம்” காட்சியகத்தை அமைத்து கலைஞரின் பாராட்டைப் பெற்றவர். காட்டூரில் கலைஞர் கோட்டத்தின் உருவாக்கத்திலும் துணைநின்றவர். 1976 முதல் இன்றளவும் திராவிடர் கழகம் வெளியிட்டு வரும் பெரியார் நாட்குறிப்பையும் ரத்தினகிரி வெளியிட்டுள்ளார். பெரியார் இயக்கம் மாத இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரத்தினகிரியை, அண்மையில் தஞ்சை சென்றபோது நலம் விசாரித்ததை நினைவு கூர்கிறேன். அத்தனை பணிகளிலும் முழுஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திச் செயல்பட்ட ரத்தினகிரியை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள், திராவிட இயக்கப் பற்றாளர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



