Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திராவிட மாடல் ஆட்சியில் கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் ரூ.56.47 கோடியில் திருவண்ணாமலையில் அரசு மாதிரி பள்ளி, மாணவர் விடுதிகள்

*பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

*முதல்வர் திறந்து வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் ரூ.56.47 கோடி மதிப்பில் கட்டப்படும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலையில் தற்போது தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு, திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலை சமுத்திரம் பகுதியில் ரூ.56.47 கோடி மதிப்பில் நிரந்தர கட்டிடம் கட்டமான பணி நடந்து வருகிறது.

அதன்படி, 1.99 லட்சம் சதுர அடி பரப்பளவில் அரசு மாதிரி பள்ளி கட்டிடம் மற்றும் மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியே விடுதிகள் என ஒருங்கிணைந்த வளாகத்தில் கட்டப்படுகிறது. பள்ளி கட்டிடம் இரண்டு தளங்களும், விடுதிகள் நான்கு தளங்களும் கொண்டதாக அமைகிறது.

அதோடு, வகுப்பறை, அறிவியல் ஆய்வகம், நூலகம், கணினி ஆய்வகம் உள்பட அனைத்து உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி கட்ட கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், திருவண்ணாமலை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் மாணவ-மாணவிகள் விடுதி கட்டமான பணியை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாதிரி பள்ளி கட்டுமான பணிகளை திட்டமிட்டபடி விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டியில் தெரிவித்தாவது:தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனால், தமிழ்நாடு உயர்கல்வித்துறையில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

தொடக்கக் கல்வி, இடைநிலை கல்வி மற்றும் உயர்நிலை கல்வி ஆகிய பள்ளி பருவங்களில் மாணவர்கள் சிறந்த கல்வியை கற்றால்தான், உயர்நிலை கல்வியில் முதல் இடத்தை பெற முடியும். அதனால், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மாதிரி பள்ளிகள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் ரூ.56.47 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளியில், மாணவர்கள் மற்றும் மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே தங்கி படிக்கும் வகையில் தனித்தனி விடுதிகள் அமைக்கப்படுகிறது. அதோடு, ஆய்வகங்கள், நூலகம், கணினி அறை மற்றும் உணவு கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்து பயன்பெறலாம். அதோடு, 440 மாணவர்கள் 440 மாணவிகள் உள்பட மொத்தம் 880 பேர் தங்கி படிக்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அரசு மாதிரி பள்ளி கட்டிட கட்டுமான பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இப்பள்ளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, கலெக்டர் தர்ப்பகராஜ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மணிவண்ணன், முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், மாநகர பகுதி செயலாளர்கள் சு.விஜயராஜ், பா.ஷெரீப், துரைவெங்கட், ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.