*பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்
கும்பகோணம் : கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதியம்மன் திருக்கோயிலில் ஆடி மாத ஆண்டு உற்சவத்தின் ஒரு பகுதியாக தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்வுற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், உற்சவர் திரௌபதியம்மன், தர்மராஜா சமேதராய் எழுந்தருள, காவிரியில் இருந்து கரகம், வேலுடன் நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து சாரங்கபாணி கீழ வீதி, சித்திரை பெரிய தேர் அருகில் தீக்குண்டம் அமைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்ற தீமிதி உற்சவத்தில், கரகம், வேல் மற்றும் பிரார்த்தனை செய்த ஆண், பெண் பக்தர்கள் என ஏராளமானோர் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இவ்விழாவில் ஏராளமானோர் திரண்டு நின்று பார்த்து தரிசனம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து நாளை 31ம் தேதி விடையாற்றி ஸ்ரீஅம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரமும், இரவு அம்பாள் பல்லக்கில் வீதியுலாவும், 1ம் தேதி வெள்ளிக்கிழமை சுத்தாபிஷேகம் நடைபெற்று, இரவு ஸ்ரீகாளியம்மன் ஊஞ்சல் உற்சவமும், அமுதுப்படையல் நடைபெற்று விழா நிறைவு பெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் பரம்பரை நிர்வாகியான செல்வம்.சுரேஷ் கொத்தனார், கோயில் நிர்வாகிகள், அம்பாள் ஊழியர்கள் மற்றும் தெருவாசிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.