பள்ளிக்கரணை பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.101 கோடியில் பெருமூடிய வடிகால், மேம்பாட்டு பணிகள்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சுற்றிய பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் ரூ.101 கோடியில் பெருமூடிய கால்வாய் மற்றும் மூடிய வடிகால் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் முகமாய் சென்னை மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், நகரத்தின் மிக பெரிய எதிரியாக வெள்ளம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் நகரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, வீடுகள், சாலைகள், தாழ்வான பகுதிகள் முழுவதுமாக பாதிக்கப்படுவதும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்குவதும் நிகழ்கின்றன.
சென்னையை பொருத்தவரை, வடக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் தான் நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரி நீருக்கு கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆகிய ஆறுகள் வடிகால்களாக உள்ளன. ஆனால், கிண்டிக்கு தெற்கே வடிகால்கள் இல்லை. கிண்டி - பரங்கிமலை - வண்டலூர் - முட்டுக்காடு இந்த பகுதிகளை சுற்று வட்டமாக கொண்ட சுமார் 306 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 77 கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள 400க்கு மேற்பட்ட நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து ஒக்கியம் மடுவு மற்றும் பக்கிங்காம் கால்வாய் வழியாக முட்டுக்காடு வழியாக அடைந்து வீணாக கடலில் கலக்கிறது. சென்னையை சுற்றியுள்ள 119 ஏரிகள், 288 குளங்களை தேவையான அளவு ஆழப்படுத்தி, முறையாக பராமரித்து, நீர் செல்லும் இணைப்புகளை முறைப்படுத்தினால் பெருமழை பெய்யும் காலங்களில் கூடுதலாக 35 சதவீத தண்ணீரை சேமிக்க முடியும். ஆனால் 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் தென் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளும் விரைவுகளும் 2023ம் ஆண்டு மிக்ஜாம் புயலில் மீண்டும் ஏற்படுத்தியது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் தென் சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி உள்ளிட்ட பகுதிகள் 2023ம் ஆண்டு வெள்ளத்திலும் பாதிக்கப்படைந்தது. இவ்வாறான தென் சென்னையில் ஏற்படும் வெள்ளப்பாதிப்புகளை தடுக்கப்பதற்காக இயற்கை கொடுத்த பெருங்கொடையாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளது.
இதில் எவ்வளவு நீரையும் உள்வாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது. நகரமயமாதலின் விளைவால் 694 ஹெக்டேர் அளவில் இன்று சுருங்கி காணப்படுகிறது. அதேபோல் தென் சென்னையில் உள்ள வேளச்சேரி ஏரி, நாராயணபுரம் ஏரி, கல்குட்டை ஏரி, ஜல்லடியன்பேட்டை ஏரி, கீழ்கட்டளை ஏரி, பல்லாவரம் ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி போன்றவையும் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஏரிகள் பெரும்பாலும் கடல் மட்டத்திலிருந்து 0 முதல் 17 மீட்டர் உயரத்தில் உள்ளன. இந்த ஏரிகளும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கும் தொடர்பு உண்டு. ஏரிகள் நிறையும்போது வழியும் நீர் சதுப்பு நிலத்திற்கு செல்லும். அதேபோல் சதுப்பு நிலத்திலிருந்து நிர் வெளியேறி காரப்பாக்கம் வழியாகவும், ஒக்கியம் மடுவுக்கு வழியாக வெளியே நீர் முட்டுக்காடு வழியாக கடலுக்கு செல்லும். ஆனால் இந்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதின் விளைவாக தண்ணீர் செல்லும் வழிகள் தடைபட்டது. இதனால் பெருமழையின் போது வெள்ளம் ஏற்படுகிறது. எனினும், இந்த நிலைமையை மாற்றும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் தீட்டி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை இணைந்து ரூ.101.70 கோடியில் 2 முக்கிய பெருவடிகால் மற்றும் வடிகால் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் பள்ளிக்கரணை, நாராயணபுரம், வேளச்சேரி, சுண்ணாம்பு கொளத்தூர், ராம் நகர், எல்ஐசி நகர், செட்டிநாடு என்கிளேவ், ராஜேஷ் நகர், விடுதலை நகர் போன்ற ஏராளமான பகுதிகளில் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப்பாதிப்புகள் குறைக்க முடியும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: காலநிலை மாற்றம் காரணமாக பள்ளிக்கரணைக்கு வரும் அதிகப்படியான மழை வெள்ளம் கடலுக்கு எளிதாக வெளியேற, பக்கிங்காம் கால்வாயில் உள்ள மணல்திட்டை அகற்றி, ஒக்கியம் மடுவிலிருந்து முட்டுக்காடு வரை அதை 100 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிக்கரணை மற்றும் நாராயணபுரம் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் ரூ.101.70 கோடியில் இரண்டு முக்கிய பெருவடிகால்வாய் மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெருங்குடி மண்டலம், பள்ளிக்கரணை அணை ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை ரூ.57.70 கோடியில் மூடிய பெருவடிகால்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி மேற்கொள்ளப்படுவதனால், பள்ளிக்கரணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள செட்டிநாடு என்கிளேவ், ராஜேஷ் நகர், விடுதலை நகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு தவிர்க்கப்படும். இந்த குடியிருப்புகள், கடந்த ஆண்டுகளில் கடும் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளாகும். இப்புதிய வடிகால் அமைப்பின் மூலம், நீர்த் தேக்கத்தை தடுக்கும் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் பெருங்குடி மண்டலம், நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை ரூ.44 கோடி மதிப்பீட்டில் இரண்டு கண் கொண்ட கூடுதல் பெருவடிகால்வாய் அமைக்கும் பணியினையும், கடந்த 2021ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு மற்றும் 2023ம் ஆண்டு மிக்ஜாம் புயலின் போது நாராயணபுரம் ஏரியின் வரையறுக்கப்படாத வடிகால்வாயினால் சுற்றுப்புற குடியிருப்புப் பகுதிகளில் பெரும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.
இவ்வெள்ளப் பாதிப்பினைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரை மற்றும் திருப்புகழ் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை இரண்டு கண் கொண்ட கூடுதல் பெருமூடு வடிகால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிவுறும் தருவாயில், நாராயணபுரம், சுண்ணாம்பு கொளத்தூர் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பள்ளிக்கரணை பகுதியில் அமைந்துள்ள ராம் நகர், எல்.ஐ.சி. நகர் பகுதிகள் வெள்ளப் பாதிப்பிலிருந்து தவிர்க்கப்படும். இந்த பணிகள் பருவமழைக்கு முன்பு முடிவடையும் வகையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.