Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டிராகன் ஃப்ரூட்! :இழந்ததை மீட்டுத்தந்த super crop

தித்திக்கும் திராட்சை பந்தல்கள்... மென்காற்றை உற்பத்தி செய்யும் மேற்குத்தொடர்ச்சி மலை... தேனி மாவட்டம் என உச்சரித்த அடுத்த நொடியே இந்த இயற்கை அற்புத காட்சிகள் எல்லாம் வந்து போகும். இத்தகைய தேனி மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயத்தைத் தொடர முடியாத சில பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வண்டியூர் என்ற கிராமம். நெல், கரும்பு, காய்கறி என செழித்து வளர்ந்த இவ்வூரில் தற்போது பல பயிர்களை சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி இருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றிருப்பதால் ஏதோ செய்கிறோம் என சில விவசாயிகள் பயிர்த்தொழிலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்த ஊரில் ஒரு புதிய பயிரைச் செய்து பார்ப்போமே என துணிச்சலோடு இறங்கி, தன் முயற்சிக்கு தம்ஸ்அப் போட வைத்திருக்கிறார் ராஜராஜன் என்ற விவசாயி. என்ன செய்தார்? எப்படி ஜெயித்தார்? அவரே கூறுகிறார் கேளுங்கள்!

``1980லயே எனக்கு அரசு வேலை கிடைத்தது. அதாவது பஸ் கண்டக்டர். ஆனால் இந்த வேலை வேண்டாம், நமது பூர்வீக தொழிலான விவசாயத்தையே மேற்கொள்வோம் என முடிவெடுத்தேன். அதற்கேற்ற மாதிரி நல்ல லாபம் கிடைத்தது. நெல், கரும்பு, கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி என விதம் விதமான பயிர்களை வைப்போம். கரும்பில் இருந்து நாட்டு வெல்லம் தயாரிப்போம். இதெல்லாம் ஒரு காலம். திடீரென எங்களுக்கு சோதனை ஆரம்பித்தது. நிலத்தடி நீர் குறைய ஆரம்பித்ததால் கால்நடை வளர்ப்பில் இறங்கினோம். தீவனம் வளர்க்கக் கூட தண்ணீர் பற்றாக்குறை நிலவியதால் அதையும் விட்டோம். இருக்கும் குறைந்த தண்ணீரைக் கொண்டு முருங்கை பயிரிடலாம் என இறங்கினோம். போதிய விலை இல்லை. பூச்சித்தொல்லையும் அதிகரித்தது. என்ன செய்யலாம் என யோசித்து வனத்துறை ஆலோசனையின் பேரில் பெருமரம் போட்டோம். அது எதிர்பார்த்த அளவுக்கு பெருக்கவில்லை. எதுவும் செட் ஆகவில்லை என்ற நிலை. ஒன்னேகால் இஞ்ச் பைப்பில் சிறிய அளவில் தண்ணீர் வருகிறது. இதை வைத்து என்ன செய்யலாம் என யோசித்தபோது டிராகன் பழம் குறித்து தெரியவந்தது. திருச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களுக்கு சென்று அங்கிருந்த டிராகன் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டேன். குறைந்த தண்ணீரே போதும், சந்தை வாய்ப்பு நன்றாக இருக்கிறது, நல்ல விலை கிடைக்கிறது என பாசிட்டிவ்வான அம்சங்களைக் கூறினார்கள். அதை வைத்து எனது 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 2023ம் ஆண்டில் டிராகனைப் பயிரிடத் தொடங்கினேன்.

டிராகனைப் பயிரிட முதலில் 3 முறை நன்றாக உழுது, ஓரக்காலில் உள்ள புற்களை அகற்றினேன். 15 வருடமாக ஆர்கானிக் விவசாயம் செய்த வயல், மண்வளம் நன்றாக இருக்கிறது. இதனால் தொழுவுரம் போடவில்லை. உழவுக்குப் பிறகு 9 அடி இடைவெளிகளில், இரண்டரை அடி அகலம், 1 அடி உயரம் கொண்ட மேட்டுப்பாத்தி அமைத்தேன். அந்த பாத்திகளில் 8 அடிக்கு ஒன்று என சிமென்ட் போஸ்டுகளை நட்டேன். டிராகன் செடி 30 ஆண்டுக்கு பலன் கொடுக்கும். இதனால் நாம் போஸ்டுகளை தரமானதாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு போஸ்டைச் சுற்றி 4 மூலைகளில் 4 செடிகள் நட்டோம். நடவு குழிகளில் கால் கிலோ மண்புழு உரம், மேல்மண் போட்டுதான் நட்டோம். ஒரு ஏக்கரில் 500 போஸ்டுகள் உள்ளன. ஒரு போஸ்டுக்கு 4 செடி என மொத்தம் 2 ஆயிரம் செடிகள் உள்ளன. டிராகனில் ஷியாம் ரெட், யெல்லோ, வொய்ட் என 3 வெரைட்டிகள் உள்ளன. நான் நட்டிருப்பது ஷியாம் ரெட். இது நல்ல மகசூல் கொடுக்கும்.

மேட்டுப்பாத்தியில் சொட்டுநீர் அமைப்பை நிறுவி இருக்கிறேன்.

இது ஒவ்வொரு 4 செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. நட்டவுடன் உயிரிப்பாசனம் செய்தேன். அதன்பிறகு 3 நாளுக்கு ஒரு பாசனம் செய்தேன். இப்போது 5 நாளுக்கு ஒரு பாசனம். டிராகனில் இலை இல்லாததால் பூச்சித்தொல்லை இருக்காது. முள் இருப்பதால் நோய் வராது. இதனால் மருந்து எதுவும் அடிக்கவில்லை. புண்ணாக்கு, பழக்கரைசல் மட்டும் தருகிறேன். நடவுக்குப் பிறகு 1 மாதம் கழித்து கடலைப்புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கை 3 நாட்கள் ஊறவைத்து செடியைச் சுற்றி தரையில் ஊற்றுவோம். வேப்பம்புண்ணாக்கு வாசத்திற்கு எறும்பு போன்றவை அண்டாது. கடலைப்புண்ணாக்கு நைட்ரஜன் சத்து கொண்டது. ஆமணக்கு புண்ணாக்கில் பல சத்துகள் உள்ளன. இவை செடிக்கு நல்ல ஊட்டம் தரும். இந்தக் கரைசலைக் கொடுத்த பிறகு 1 மாதம் கழித்து பழக்கரைசல் கொடுப்போம். அதாவது பழக்கடையில் அழுகிப்போன வாழைப்பழங்களை வாங்கி வந்து தொலி (தோல்), பழத்தை தனித்தனியாக பிரித்து மிக்சியில் அடித்து, பின்பு ஒன்றாக கலந்து 20 லிட்டர் பேரலில் ஊற்றுவோம். அதில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டிரியா உள்ளிட்ட 7 வகைநுண்ணூட்டக்கலவையை கலந்து 7 நாள் ஊற வைப்போம். ஊறும்போது ஒரு நாளைக்கு 3 முறை கலக்குவோம். இந்தக்கலவையை எடுத்து டைல்யூட் செய்து போஸ்டுகளைச் சுற்றி ஊற்றுவோம். 2 மாதத்திற்கு ஒருமுறை புண்ணாக்கு கரைசல், பழக்கரைசலை மாற்றி மாற்றி கொடுப்போம். 2 மாதத்திற்கு ஒருமுறை களையெடுப்போம். இடையில் கோனோவீடர் வைத்து ஓட்டுவேன். வேறு அதிகமாக வேலை இருக்காது.

செடி வைத்ததில் இருந்து ஒன்றரை வருடத்தில் பழம் வர ஆரம்பித்தது. அப்போது குறைவாகத்தான் மகசூல் கிடைத்தது. இப்போது 2வது ஆண்டில் விளைச்சல் சற்று அதிகரித்து இருக்கிறது. 1 போஸ்டுக்கு 10 பழம் கிடைக்கிறது. 500 போஸ்ட்டுகளில் இருந்து 5 ஆயிரம் பழங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 3 பழங்கள் சேர்ந்து ஒரு கிலோ எடை நிற்கிறது. அதன்படி ஒரு ஏக்கரில் இருந்து சுமார் 1600 கிலோ பழங்கள் கிடைக்கும். தற்போது ஒரு கிலோ ரூ.120 லிருந்து 150 வரை விற்பனையாகிறது. குறைந்தபட்சமாக ரூ.120 கிடைத்தாலும் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். அடுத்த அடுத்த ஆண்டுகளில் விளைச்சல் படிப்படியாக அதிகரிக்கும். சராசரியாக ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம் பார்க்கலாம். ஆண்டுக்கு ரூ.1 லட்சம் செலவு போனாலும் 4 லட்சம் லாபம் பார்க்கலாம். நான் சிமென்ட் போஸ்ட், பென்சிங் போன்றவற்றை அமைத்திருப்பதால் ரூ.8 லட்சம் வரை செலவு ஆகியிருக்கிறது. இதை இரண்டு வருடத்தில் எடுத்துவிடலாம். அதற்குப்பிறகு எல்லாமே லாபம்தான்’’ என்கிறார்.

தொடர்புக்கு:

ராஜராஜன்: 94438 21369.

சுமார் 15 ஆண்டுகளாக ஆர்கானிக் விவசாயம் செய்து வரும் ராஜராஜன் மண்புழு உரம் மற்றும் இயற்கை பூச்சிவிரட்டிகளைத் தானே தயாரித்து பயிர்களுக்கு பயன்படுத்துகிறார். ரசாயனம் பயன்படுத்தாமல் விளைவிக்கும் பழம் என்பதால் தனது வயலில் விளையும் டிராகனுக்கு கூடுதல் சுவை இருக்கிறது என்கிறார்.

பல பெரிய அளவிலான பழக்கடைகள், ஷாப்பிங் மால்களில் இருந்து ராஜராஜனின் டிராகன் பழங்களை வாங்கிச் செல்கிறார்கள். எதிர்வரும் காலங்களில் இதை மக்களிடம் குறைந்த விலைக்கு நேரடியாக விற்கப்போவதாகவும் தெரிவிக்கிறார்.

சுற்றுப்பட்டு பகுதியிலேயே ராஜராஜன் மட்டும்தான் டிராகன் பயிரிடுகிறார். இதனால் இவரது வயலைப் பயிரிட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்துசெல்கிறார்கள். அவர்களுக்கு டிராகன் பயிரிடும் முறை, பராமரிப்பு முறை குறித்தும் விளக்குகிறார்.