Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.35 லட்சம் வரதட்சணை கேட்டு மனைவியை உயிருடன் எரித்து கொன்ற கணவனை போலீசார் சுட்டுப் பிடித்தனர்: மாமியாரும் கைது: நொய்டாவில் அதிர்ச்சி சம்பவம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிர்சா கிராமத்தை சேர்ந்தவர் விபின். இவரது மனைவி நிக்கி (28). கடந்த 2016ம் ஆண்டில் இவர்களுக்கு திருமணமாகி 6 வயதில் மகன் உள்ளார். நிக்கியின் மூத்த சகோதரி காஞ்சன். இவர், விபினின் மூத்த சகோதரர் ரோகித்தை மணந்துள்ளார். ஒரே குடும்பத்தில் மருமகள்களாக சென்ற சகோதரிகளுக்கு புகுந்த வீட்டில் பல கொடுமைகள் நடந்துள்ளது. நிக்கி திருமணத்தின் போது அவரது தந்தை வரதட்சணையாக உயர்ரக எஸ்யுவி கார், புல்லட் பைக், தங்கம், ரொக்கம் கொடுத்துள்ளார்.

ஒவ்வொரு கர்வா சாத் பண்டிகையின் போதும் ஏராளமான பரிசுப் பொருட்களை தந்துள்ளார். ஆனால், கணவன் விபினும், மாமியாரும் கூடுதல் வரதட்சணை கேட்டு நிக்கியை கொடுமைபடுத்தினர். நிக்கி பியூட்டி பார்லர் வைத்து குடும்பத்தை நடத்திய நிலையில் அதில் கிடைக்கும் அத்தனை பணத்தையும் கேட்டு மாமியார் சித்ரவதை செய்துள்ளார். மேலும், விபின், ரோகித் இருவருக்குமே வேறு பெண்களுடன் பழக்கம் இருப்பதால் அதைக் கேட்ட மனைவிகளை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், மேற்கொண்டு ரூ.35 லட்சம் வரதட்சணை கேட்டு விபினும், அவரது தாயாரும் சேர்ந்து நிக்கியை கடந்த 21ம் தேதி வீட்டில் வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இது நிக்கியின் சகோதரி காஞ்சன் மற்றும் 6 வயது மகன் கண்முன்னே நடந்துள்ளது. அங்கு நடப்பதை காஞ்சன் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். நிக்கியின் தலைமுடியை பிடித்து மாடி படிக்கட்டில் தரதரவென இழுத்து வந்த அவரது கணவன், உடலில் மண்ணெண்ணெய் போன்ற திரவத்தை ஊற்றி தீவைத்துள்ளான்.

இதனால் உடலில் தீப்பற்றியதும் நிக்கி அலறித் துடித்தார். பலத்த தீக்காயத்துடன் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிக்கி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து நிக்கி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபினை கைது செய்தனர். தலைமறைவான அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரனை தேடினர்.

இதற்கிடையே, நேற்று மதியம் விபினை அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்து வந்த போது, போலீசாரின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு விபின் தப்பிக்க முயன்றார். உடனடியாக அவரை விரட்டிய போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மேலும், கஸ்னா பகுதியில் பதுங்கியிருந்த மாமியாரை போலீசார் நேற்று கைது செய்தனர். நிக்கியை எரித்து கொல்லும் கொடூரமான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி உள்ளன.

* நாடகமாடிய கணவன்

மனைவியை கொன்றதும் தன்னை காப்பாற்றிக் கொள்ள விபின் சமூக ஊடகத்தில் சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதுமட்டுமின்றி கைதான பிறகும் அவர் மனம் வருந்தாமல், ‘‘நான் எதுவும் செய்யவில்லை. என் மனைவி தான் தற்கொலை செய்து கொண்டார்.

கணவன், மனைவிக்குள் சண்டை இருப்பது சகஜம்தானே?’’ என கூறி உள்ளார். ஆனால் இவர்களது 6 வயது மகன் தனது தாய்க்கு நடந்த கொடூரத்தை போலீசாரிடம் கூறி உள்ளார். இந்த வீடியோவை தான் எடுக்காவிட்டால், தங்களுக்கு நடக்கும் கொடூரம் வெளி உலகிற்கு தெரியாமலேயே போயிருக்கும் என காஞ்சன் கூறி உள்ளார்.