வரதட்சணை கொடுமை அதிகரிக்கிறது குடும்ப வன்முறையால் பெண்கள் இறந்ததாக பதிந்த வழக்கு எத்தனை? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், கணவர் குடும்பத்தினர் துன்புறுத்தலால் கடந்த 2016ல் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அந்த பெண்ணின் கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி மஞ்சுளா, ஆரோக்கியமான சமுதாயத்தின் அடித்தளம் குடும்பங்கள் தான்.
ஒவ்வொரு குடும்பத்தின் ஆணிவேராக பெண்கள் தான் இருக்கின்றனர். அவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதால் அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகள் உட்பட அனைவரும் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றனர். வரதட்சணை கொடுமை உட்பட பல்வேறு இன்னல்களுக்கு குடும்ப பெண்கள் ஆளாகி வருவது அதிகரிக்கிறது.
இந்த நடைமுறை சமுதாயத்தின் கட்டமைப்பை தகர்ப்பதாக உள்ளது. எனவே அரசுக்கு இதுதொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை இந்த நீதிமன்றம் வழங்க முடிவு செய்கிறது. ஆகையால், கடந்த 5 ஆண்டுகளில் இது போன்ற குடும்ப வன்முறைகளால் பெண்கள் இறந்தது குறித்து எத்தனை வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பது உள்ளிட்ட விபரங்களை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.