மூணாறு: மூணாறில் சுற்றுலாத் தலங்களை காண்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட டபுள் டெக்கர் சுற்றுலாப் பேருந்து 10 மாதங்களில் ரூ.1 கோடி வருவாய் ஈட்டி சாதனை புரிந்துள்ளது. கேரளா மாநிலம், மூணாறில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பதற்கு அம்மாநில அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் ராயல் வியூ என்ற பெயரில் ‘டபுள் டெக்கர்’ பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. கண்ணாடி இழையால் வடிவமைக்கப்பட்ட இந்த பேருந்து கடந்த பிப்.8ல் பயன்பாட்டுக்கு வந்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே இந்த பேருந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பேருந்தில் இதுவரை 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனர். பேருந்தின் கீழ் தளத்தில் 12 பேர், மேல் தளத்தில் 38 பேர் என மொத்தம் 50 பேர் பயணிக்கலாம். மேல் தளத்தில் பயணிக்க ரூ.400 மற்றும் கீழ் தளத்தில் பயணிக்க ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மூணாறு டிப்போவிலிருந்து ஆனையிறங்கல் அணை வரை உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிடலாம். காலை 9 மணி, மதியம் 12:30 மணி மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் பேருந்து இயக்கப்படுகிறது. சேவை துவங்கி சில மாதங்களே ஆகிய நிலையில், இந்த பேருந்து சுமார் ரூ.1 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. மூணாறில் ‘டபுள் டெக்கர்’ பேருந்து வலம் வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் இன்றளவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

