விளையாட்டில் ஊக்கமருந்துக்கு எதிரான சர்வதேச மாநாடு ஆசிய- பசிபிக் துணைத் தலைவராக இந்தியா மீண்டும் தேர்வு
புதுடெல்லி: விளையாட்டில் ஊக்கமருந்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான துணைத் தலைவராக இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது. விளையாட்டில் ஊக்க மருந்துக்கு எதிரான சர்வதேச 2 நாள் மாநாடு பாரிசில் கடந்த 20ம் தேதி தொடங்கியது. 2 நாள் மாநாட்டில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் 190க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் இந்தியாவின் சார்பில் ஒன்றிய விளையாட்டு துறை செயலாளர் ரஞ்சன் ராவ், இயக்குனர் ஜெனரல் அனந்த குமார் கலந்து கொண்டனர். மாநாட்டில் நடந்த கலந்துரையாடலில் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், விளையாட்டில் ஊக்கமருந்து ஒழிப்பு நிதிக்கு நிதியளித்தல் மற்றும் மரபணு கையாளுதல் உள்ளிட்ட வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மாநாட்டில் ஊக்க மருந்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் அஜர்பைஜான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. துணை தலைவராக இந்தியா மீண்டும் தேர்வானது. பிரேசில், ஜாம்பியா,சவுதி அரேபியா ஆகியவை அந்தந்த பிராந்திய குழுக்களுக்கான துணைத் தலைவர்களாக தேர்வாகியுள்ளன என்று ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
