புதுடெல்லி: தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கங்களுக்காக குற்றவியல் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் பலமுறை தனது கவலையையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, திருமண உறவுப் பிரச்னைகளில் வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் (பிரிவு 498ஏ) போன்ற சட்டங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாகவும், சொத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான உரிமையியல் வழக்குகளுக்குக் குற்றவியல் சாயம் பூசி எதிர் தரப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த வர்த்தகப் பரிவர்த்தனை தொடர்பான மோசடி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மீண்டும் இதுகுறித்துக் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கங்களுக்காக குற்றவியல் நீதி அமைப்பைப் ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது. இந்த வழக்கில், உரிமையியல் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டிய ஒரு பிரச்னைக்கு, வர்த்தகம் நடந்து முடிந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவியல் சாயம் பூசப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி ஒரு பொருளை வழங்கத் தவறுவது மட்டுமே மோசடியாகிவிடாது.
ஆரம்பத்திலேயே மோசடி செய்யும் நோக்கம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாதபோது, இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420-ன் கீழ் வராது’ எனக் கூறி வழக்கை ரத்து செய்தனர். சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட நபர்களைத் துன்புறுத்துவதும், அச்சுறுத்துவதும் தனிநபர் சுதந்திரத்தையும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையையும் குலைத்துவிடும் எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் வேதனை தெரிவித்தனர்.