போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாதீங்க... ‘48 மணி நேரத்தில் உடல்களை ஒப்படையுங்கள்’: ஹமாசுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
வாஷிங்டன்: பிணையாகப் பிடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 13ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த உயிருடன் இருந்த கடைசி 20 இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திலேயே, உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக இருந்தது. ஆனால், உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் ஹமாஸ் தரப்பில் தாமதம் ஏற்பட்டு வந்ததால், இந்த விவகாரத்தில் தற்போது மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஹமாஸ் அமைப்புக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில், ‘இன்னும் 48 மணி நேரத்திற்குள் உயிரிழந்த பணயக்கைதிகள் அனைவரின் உடல்களையும் ஹமாஸ் அமைப்பு ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள மற்ற நாடுகள் தகுந்த நடவடிக்கை எடுக்கும்’ என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஹமாஸ் வெளியிட்ட பதிலில், ‘காசா பகுதியில் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டறிந்து மீட்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. இதற்கு சிறப்பு உபகரணங்களும், மிகுந்த முயற்சியும் தேவைப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
