திரும்ப திரும்ப கேட்காதீங்க.... கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை நான் எடுப்பதுதான் இறுதி முடிவு: கண்ணீர் விடாத குறையாக பேட்டியளித்த எடப்பாடி
சிதம்பரம்: ‘பாமக கூட்டணிக்கு வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன். கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை. நான் எடுப்பதுதான் இறுதியான முடிவு’ என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சிதம்பரத்துக்கு நேற்று சென்ற அவர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தொகுதி விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
அமித்ஷா சொன்னது எங்களது கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்றுதான் கூறினார். கூட்டணி ஆட்சி அல்ல. நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் நான் பொறுப்பல்ல. நான்தான் தெளிவாக சொல்லி விட்டேன். இந்த கூட்டணிக்கு நான்தான் தலைமை. நான் எடுப்பதுதான் இறுதியான முடிவு. நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம். நாங்கள் இருவரும் அமர்ந்து தெளிவுபடுத்தியாச்சு. அதனால் இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும். அதிமுக ஆட்சி அமைக்கும். இபிஎஸ் ஆட்சி அமைப்பார். ஏதாவது பரபரப்புக்காக தோண்டி தோண்டி கேட்கிறீர்கள்.
இந்த கூட்டணியில் எந்த விரிசலையும் ஏற்படுத்த முடியாது. ஒன்னும் முடியாது. தெளிவான கூட்டணி. பிரமாண்டமாக வெற்றிபெறும். தனிப்பெரும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார். அதிமுக அழைத்தால் எந்தவித நிபந்தனையுமின்றி இணைய தயாராக இருப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதெல்லாம் கடந்து விட்டது. காலம் கடந்து போய்விட்டது என்று எடப்பாடி தெரிவித்தார்.
அன்புமணிக்கு மட்டும் பதிலா அமித்ஷாவிடம் தயக்கம் ஏன்..?
திருப்பூரில் பாமக மாநில பொருளாளர் சையத் மன்சூர் உசேன் தலைமை நிருபர்களிடம் கூறுகையில், ‘கட்சியில் உள்ள பிரச்னை சிறிய பிரச்னை தான். அது ஓரிரு நாட்களில் சீரடையும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இருவரும் சேர்ந்து தான் தேர்தலை சந்திப்போம். பாமக இருக்கும் கூட்டணி தான் வெல்லும். நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும். கூட்டணி ஆட்சி கிடையாது என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆனால் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிறார். அவருக்கு பதில் சொல்ல முடியாமல் தயக்கம் காட்டும் இபிஎஸ் எங்கள் தலைவர் அன்புமணிக்கு பதில் சொல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
‘அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ரத்தின கம்பள விரித்து வரவேற்பு’
சிதம்பரம் தொகுதி பிரசார பயணத்தில் திறந்த வேனில், எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேருகின்றவர்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கின்ற கட்சி அதிமுக. கூட்டணி என்பது அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது. எல்லா கட்சிகளுமே கூட்டணி வைத்துதான் போட்டியிடுகின்றது’ என்றார்.
மு.க.ஸ்டாலின் விமர்சனம் பஸ்சை மாற்றிய எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பஸ்சில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த சூழலில், நேற்று மயிலாடுதுறையில் நடந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியின் பிரசார பேருந்தை விமர்சனம் செய்து ‘சுந்தரா டிராவல்ஸ்’ பஸ் போன்று இருப்பதாக பேசியிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிதம்பரத்தில் பிரசாரத்தை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பஸ்சை தவிர்த்தார். அதற்கு பதிலாக டெம்போ டிராவலர் திறந்த வேனில் நின்றபடி பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்ததால்தான் எடப்பாடி பழனிசாமி பிரசார பஸ்சை தவிர்த்துவிட்டு வேனில் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.