தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை என்ற பிறகு 23,180 பேர் உறுப்புதான பதிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் சார்பாக நடந்த உறுப்பு தான தின நிகழ்ச்சியில், உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்து, உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருதுகள் வழங்கினார். மேலும் வருடாந்திர அறிக்கை மற்றும் மேம்படுத்தப்பட்ட செயலி விடியல் 2.0 வெளியிட்டு, உறுப்பு கொடையாளர்களுக்கு மலரஞ்சலி மற்றும் இசையஞ்சலி செலுத்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2023ம் ஆண்டு மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு 522 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளனர். 2024ம் ஆண்டு 208 பேர் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்திருக்கிறார்கள்.
அவர்களுடைய குடும்பத்தினருக்கு கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிப்புக்கு பிறகு, இதுவரை 23,180 பேர் உறுப்புதான பதிவை செய்திருக்கிறார்கள். 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை 2,242 பேர் உடலுறுப்பு கொடையாளர்களாக இருந்துள்ளனர். இந்த 2,242 பேரின் உடலுறுப்பு தானத்தின் மூலம் 8,017க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு வகைகளில் பயன்பெற்றுள்ளார்கள். கடந்த நாட்களில் 2 வகையான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீட்டு இருந்த நிலை மாறி, தற்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு மூலம் 8 வகையான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.