புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் ஐஎன்எஸ் ஆன்ட்ரோத் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு 8 நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் தயாரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஜூன் மாதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் ஐஎன்எஸ் அர்னாலா கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐஎன்எஸ் ஆன்ட்ரோத் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
கொல்கத்தாவின் கார்டன் ரிச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த கப்பல் சனியன்று இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது. ஆன்ட்ரோத் என்ற பெயர் லட்சத்தீவு கூட்டத்தில் உள்ள ஆன்ட்ரோத் தீவில் இருந்து பெறப்பட்டதாகும். அதன் பரந்த கடல்சார் பிரதேசங்களை பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகின்றது. இந்திய கடற்படையில் ஆன்ட்ரோத் சேர்க்கப்பட்டது மற்றொரு மைல் கல்லாகும். இந்திய பெருங்கடலில் சீனாவின் வளர்ந்து வரும் ஊடுருவல்கள் பின்னணியில் அன்ட்ரோத் சேர்க்கப்பட்டு கடல்சார் திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.