Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 நாள் தொடர் விடுமுறை காரணமாக உள்நாட்டு விமான கட்டணம் பலமடங்கு உயர்வு: அலைமோதும் பயணிகள் கூட்டம்

மீனம்பாக்கம்: தமிழ்நாட்டில் நாளை (15ம் தேதி) முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்களின் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்குப் புறப்பட்டு செல்கின்றனர். இதனால் சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இச்சந்தர்ப்பத்தில், அனைத்து உள்நாட்டு விமானங்களின் பயணக் கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துவிட்டன. தமிழ்நாட்டில் நாளை (15ம் தேதி) சுதந்திர தின விழா, 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகின்றன. இதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள், இந்த 3 நாள் விடுமுறையை ஜாலியாக கழிக்க, தங்களின் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்கள் போன்றவற்றுக்கு கிளம்பி செல்ல துவங்கிவிட்டனர்.

இந்த 3 நாள் விடுமுறை நாளில் சாலை மார்க்கமாக வாகனங்களில் சென்று வருவதற்கு 2 நாள் பயண நேரம் எடுத்து கொள்ளும் என்பதால், நீண்ட கால விரையத்தை தடுக்க விமானப் பயணங்களை நாடத் துவங்கிவிட்டனர். இதையடுத்து, சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும், உள்நாட்டு விமானங்களில் இன்று காலை முதல் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் பெரும்பாலான விமானங்களில் டிக்கெட் கிடைக்கவில்லை. ஒருசில விமானங்களில் மட்டுமே டிக்கெட்டுகள் உள்ளன. எனினும், குறைந்த கட்டண டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. அதற்கு பதிலாக, பலமடங்கு அதிகரிக்கப்பட்ட விமான டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

எனினும், இந்த 3 நாள் தொடர் விடுமுறையில் சொந்த ஊர் அல்லது சுற்றுலா தலங்கள் சென்று வரும் ஆர்வத்தால், அதிக கட்டண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர். இதனால் இன்று அனைத்து உள்நாட்டு விமான டிக்கெட்டுகளின் கட்டணங்கள் பலமடங்கு அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண கட்டணம் ரூ.4 ஆயிரம். இன்றைய கட்டணம் ரூ.16,769 வரை. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண கட்டணம் ரூ.3,843. இன்றைய கட்டணம் ரூ.21,867 வரை.

அதேபோல் சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண கட்டணம் ரூ.1,827. இன்றைய கட்டணம் ரூ.14,518 வரை. சென்னையில் இருந்து கோவைக்கு சாதாரண கட்டணம் ரூ.3,818. இன்றைய கட்டணம் ரூ.15,546 வரை. மேலும், சென்னையில் இருந்து சேலத்துக்கு சாதாரண கட்டணம் ரூ.3,398. இன்றைய கட்டணம் ரூ.7,613 வரை. இதேபோல் பல்வேறு உள்நாட்டு விமானங்களின் கட்டணங்கள் பலமடங்கு அதிகரித்து வருவது பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.