ஊட்டி: குன்னூர் அருகே குரும்பாடியில் பாறைகள் உருண்டு விழுந்து கேரள அரசு பேருந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. இதனிடையே குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை, குரும்பாடி பகுதியில் ராட்சத பாறைகள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது.
இதில் அந்த வழியே வந்த கேரளா அரசு பேருந்து மீது பாறைகள் விழுந்ததில் பேருந்தின் முன் பகுதி சேதம் அடைந்துள்ளது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் உதவியுடன் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.