Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டாலருக்கு நிகராக 2014ல் ரூ.58 தற்போது ரூ.88; பாஜ ஆட்சியில் மதிப்பை இழந்த இந்திய ரூபாய்: சர்வதேச அரங்கில் தொடரும் சறுக்கல்

‘‘நெருக்கடிகள் வரும். ஆனால் ஒரு நெருக்கடியின் போது தலைமை சரியான திசையில் செல்லாமல், நம்பிக்கையற்றதாக இருந்தால், அந்த நெருக்கடி மிக மிக கடுமையாகி விடும்.... டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்தும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்தும் கவலைப்படாதது நமது நாட்டின் துரதிருஷ்டம்... அவர்கள் எதைப் பற்றியாவது கவலைப்பட்டால், அது அவர்களின் பதவியை காப்பாற்றுவது பற்றியதாக மட்டுமே இருக்கும்’’ 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி பிரசாரத்தில் உதிர்த்த வார்த்தைகள் இவை.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதிருந்தே ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு வந்தது. குஜராத் மிளிர்கிறது, குஜராத்தை போல இந்தியா முழுமையும் ஜொலிக்கும் என்கிற ரீதியில் பல கருத்துகள் உலாவத் தொடங்கின. உலக அரங்கில் இந்தியா வீழ்ந்து கிடந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அதையே தங்கள் பிரசார பலமாகவும் ஆக்கிக் கொண்ட பாஜவினர், மோடியால்தான் இந்தியா மீளப்போகிறது என்றெல்லாம் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர்.

அதில் ஒன்றுதான், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் மீட்சி. எப்படியோ... சாதுர்யமான பிரசாரம் மற்றும் பல்வேறு உத்திகளால் 2014ம் ஆண்டு பாஜ தலைமையிலான தே.ஜ. கூட்டணி வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றார். மோடி முதல் முறையாக பிரதமராகப் பதவியேற்ற 2014 மே 26ம் தேதி, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.58.58.

அப்போது யோகா குரு பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்பட பல பாஜ ஆதரவு பிரபலங்களும் இந்திய ரூபாய் மதிப்பு வலுவடையப்போகிறது என புளகாங்கிதம் அடைந்தனர். ரூபாய் மதிப்பு ரூ.40ஐ எட்டும் என்று கணிப்புகளையும் வெளியிட்டனர். ஆனால், இதற்கு நேர் மாறாக, ரூபாய் மதிப்பு படு வீழ்ச்சியை அடைந்து கொண்டிருந்தது. ஒன்றியத்தில் பாஜவின் முதல் 5 ஆண்டு முடியும்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.69.98. 10 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் டாலர் மதிப்பு 85.27 ஆனது.

தற்போது வரலாறு காணாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. அதிலும், அமெரிக்காவில் டிரம்ப் அதிபரான பிறகு ஏற்பட்டுள்ள வர்த்தகப்போர் மற்றும் சர்வதேச நாடுகளில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற நிலை காரணமாக பங்குச்சந்தைகள் அவ்வப்போது கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இதுபோல் டாலருக்கு நிகரான ரூபாய் உள்ளிட்ட இதர நாடுகளின் கரன்சி மதிப்பும் பாதாளத்தை நோக்கி பாய்ந்து வருகின்றன.

ரிசர்வ் வங்கி புள்ளி விவரத்தின்படி,டிரம்ப் வெற்றி பெற்ற நாளில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.84.1 ஆக இருந்தது. தொடர்ந்து சரிவை சந்தித்த ரூபாய் மதிப்பு, டிசம்பர் 19ம் தேதி ரூ.85.07 ஆனது. டிரம்ப் கடந்த ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராகப் பதியேற்றார். அதற்கு முன்னதாக ஜனவரி 13ம் தேதி ரூபாய் மதிப்பு ரூ.86.43 ஆனது. அடுத்ததாக கடந்த ஜூலை 30ம் தேதி ரூபாய் மதிப்பு ரூ.87.55 ஆனது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 46 காசுகள் குறைந்து ரூ.88.80 வரை சென்றது. பின்னர் வர்த்தக முடிவில் ரூ.88.76 ஆனது. நேற்று சற்று மீண்டு ரூபாய் மதிப்பு ரூ.88.71 ஆக இருந்தது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே வரி விதிப்பால் வர்த்தகப் போர் துவங்கியது. இந்திய பொருட்களுக்கு வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

தற்போது எச்1 பி விசா கட்டண உயர்வும் இந்தியர்களுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வந்த பிறகு டாலர் மதிப்பு வலுவடைந்ததால் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி, டிரம்ப் வெற்றி பெற்றார். அடுத்த 10 நாளிலேயே, அதாவது, கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவாக ரூ.84.40ஐ எட்டியது.

இதையடுத்து கையிருப்பு டாலர்களை விற்கும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி இறங்கியது. இது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை 70,400 கோடி டாலரில் இருந்து 68,200 டாலராக குறைத்தது. இதுஒருபுறம் இருக்க, டிரம்பின் 2வது ஆட்சிக் காலத்தில் ரூபாய் மதிப்பு மேலும் 8 முதல் 10 சதவீதம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பாரத ஸ்டேட் வங்கி கணிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி ரூபாய் மதிப்பு ரூ.87 முதல் ரூ.92 வரை இருக்கலாம் என தெரிவித்திருந்தது. ஆனால், டிரம்ப் ஆட்சி அமைத்து ஓராண்டு கூட முடியாத நிலையிலேயே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88 ஐ தாண்டி விட்டது. எனவே, ரூபாய் மதிப்பு ரூ.90ஐயும் தாண்டுமா என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் எழுந்துள்ளது. சிலர் ரூ.100ஐ தாண்டலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த சரிவால், ஐடி துறையினருக்கு மட்டும் லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மற்றபடி ஏற்றுமதியாளர்கள் லாபம் ஈட்ட வாய்ப்புகள் அதிகம். நகை, ஆபரணங்கள், பெட்ரோலிய பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த துறையினர் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. மும்பையை சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர் கூறுகையில், ‘‘இதே நிலை தொடர்ந்தால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் 100ஐ தொடலாம்’’ என்றார்.

ஒரு நாட்டின் பண மதிப்பு வலுவிழப்பது நல்லதல்ல. அது சர்வதேச அரசில் அதன் நிலையை கேள்விக்குரியதாக்கிவிடும். பண வீக்கம், ஸ்திரத்தன்மையற்ற நிலை ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடும். இதில் விழிப்போடும் கவனத்தோடும் செயல்பட வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது.

மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடிக்கும், சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கும் என பாஜ தலைவர்களும், ஆதரவாளர்களும் கூறி வரும் நிலையில், ரூபாய் மதிப்பு விஷயத்தில் காங்கிரஸ் அரசு மீது பிரதமர் வைத்த விமர்சனங்கள், கேள்விகள் ரூபாயில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக பூமராங் போல அவரை நோக்கியே திரும்பியிருக்கிறது.

ஒரு நெருக்கடியின் போது தலைமை சரியான திசையில் செல்லாமல், நம்பிக்கையற்றதாக இருந்தால், அந்த நெருக்கடி மிக மிக கடுமையாகி விடும் என பிரதமர் கூறிய அதே வார்த்தைகள் அவரை நோக்கிய கணைகளாக பாய்கின்றன. ரூபாய் மதிப்பை உயர்த்த எந்த நடவடிக்கைகளையும் பாஜ அரசு எடுக்கவில்லையா? வெற்றுப் பேச்சுகளால் மட்டுமே பிம்பம் கட்டமைக்கப்படுகிறதா என்ற அடுக்கடுக்கான கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன.

* மதிப்பை உயர்த்திய மன்மோகன்

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை விட்டு செல்லும்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.3.31. காங்கிரஸ் ஆட்சியில் ரூபாய் மதிப்பை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வாஜ்பாய் ஆட்சியில் ரூபாய் மதிப்பு ரூ.45. அதன்பிறகு மன்மோகன் சிங் பிரதமராக வந்தபோது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை ரூ.41 ஆக உயர்த்தினார். 2008ல் உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது தான் ரூபாய் மதிப்பு ரூ.48 ஆக சரிந்தது. மோடி ஆட்சியில் இது 88 ஆக சரிந்து விட்டது.

* ஒரு நெருக்கடியின் போது தலைமை சரியான திசையில் செல்லாமல், நம்பிக்கையற்றதாக இருந்தால், அந்த நெருக்கடி மிக மிக கடுமையாகி விடும் என பிரதமர் கூறிய அதே வார்த்தைகள் அவரை நோக்கிய கணைகளாக பாய்கின்றன

* யாருக்கு என்ன பாதிப்பு?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து வலுவிழந்து வரும் நிலையில், பண மதிப்பு குறைவதால் யாருக்கு என்ன பாதிப்பு அல்லது லாபம் என்பது குறித்த விவரம் வருமாறு:

* வாடிக்கையாளர்கள்

ஏற்கெனவே பண வீக்கம் அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி பொருட்களின் விலை அபரிமிதமாக உயரும்.

* ஏற்றுமதியாளர்

ஏற்றுமதி பொருட்களுக்கு டாலரில் பணம் பெறுவதால் லாபம் அதிகரிக்கும்.

* வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள்

கல்விக் கட்டணத்துக்கு அதிக தொகை செலுத்த வேண்டி வரும்.

* சுற்றுலா பயணிகள்

விமானம், ஓட்டல்களுக்கு டாலரில் செலுத்த வேண்டி வரும்போது செலவுகள் அதிகரிக்கும்.

* முதலீட்டாளர்கள்

டாலரில் டெபாசிட் செய்திருந்தால், முதலீட்டின் மீதான லாபம் ரூபாய் மதிப்பில் அதிகரித்திருக்கும்.

* அமெரிக்க பங்குகளில் முதலீடு

சர்வதேச சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும், ரூபாய் மதிப்பில் இழப்பு குறைவாக இருக்கும்.