துபாய்: தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் கத்தார், அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. இஸ்ரேலுக்கும், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் படையினருக்கும் இடையே 20 மாதங்களுக்கும் மேலாக போர் நீடிக்கிறது. இந்த போரில் அப்பாவி பாலஸ்தீனர்கள் உயிரிழப்பது தொடர் கதையாக நீடிக்கிறது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. அதன்ஒரு பகுதியாக அவ்வப்போது கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் நடந்த ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் மீது இஸ்ரேல் நேற்றுமுன்தினம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஹமாஸ் படையின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கலீல் அல்-ஹய்யா என்பவர் உயிர் தப்பினார். இதற்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவுக்கு இந்த தாக்குதல் பற்றி முன்பே தெரியும் என்றும், இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதை அமெரிக்கா மறுத்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல் காரணமாக கத்தார், அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டும் என கூறப்படுகிறது.