ஓசூர்: உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நந்தலால்-ரேகா தம்பதியினர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் விவசாயி ராமமூர்த்தியின் விவசாய தோட்டத்தில் தங்கி, கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மூன்றரை வயது மகன் சத்யா, கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று கடித்து குதறியது. உடனடியாக பெற்றோர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர், சிறுவனை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், நேற்று சிறுவன் சத்யா திடீரென மயங்கி விழுந்தான். உடனே ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். நாய் கடித்து 20 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.