மாப்பு.... வெச்சிட்டாண்டா ஆப்பு.... நாய் தொல்லை நாடகம் நடித்தவரை மேடைக்கே சென்று குதறிய தெருநாய்: கண்ணூர் அருகே களேபரம்
திருவனந்தபுரம்: கேரளாவிலும் அனைத்து பகுதிகளிலும் தெருநாய் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், கண்ணூர் மாவட்டம் மய்யில் பகுதியில் தெருநாய் தொல்லை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு நாடகம் நடத்த அப்பகுதியை சேர்ந்த நாடக நடிகரான ராதாகிருஷ்ணன் (57) தீர்மானித்தார். இதற்காக நேற்று முன்தினம் இரவு அங்குள்ள கிருஷ்ணபிள்ளை நினைவு நூலகத்தில் ஒரு ஓரங்க நாடகத்தை இவர் அரங்கேற்றினார். இதை பார்ப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் நூலகம் முன் திரண்டனர்.
நாடகம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு குழந்தையை நாய் கடித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை ராதாகிருஷ்ணன் நடித்துக் காண்பித்துக் கொண்டிருந்தார். நாடகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பின்னணியில் நாய் குரைக்கும் ஒலி அமைப்பு செய்யப்பட்டிருந்தது. மேடையில் இருந்து நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்டதும் அந்தப் பகுதியில் திரிந்து கொண்டிருந்த தெருநாய் ஒன்று, ‘என்னடா... நம்ம ஏரியாவில் புதிதாக நாய் சத்தம் கேட்கிறதே... என்னோட ஏரியாவுக்குள்ள நுழைஞ்சது எவன்டா....’ என ஆக்ரோஷத்துடன் நாடகம் நடந்து கொண்டிருந்த பகுதிக்கு ஆவேசமாக பாய்ந்து வந்து மேடையில் ஏறி ராதாகிருஷ்ணன் மீது பாய்ந்து, அவரது காலில் கடித்து குதறிவிட்டு அங்கிருந்து ஓடியது. ‘அடடா... நாடகத்தில் என்ன ஒரு ரியலான காட்சியமைப்பு? என்ன ஒரு தத்ரூபமான நடிப்பு?’ என பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மெய்சிலிர்த்து போயினர்.
நாடகத்தை நல்லபடியாக முடித்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ராதாகிருஷ்ணன் உண்மையில் தன்னை நாய் கடித்த விவரத்தை காட்டிக் கொள்ளாமல், வலியைப் பொறுத்துக் கொண்டு ஒரு வழியாக நடித்து முடித்தார். நாடகம் முடிந்த பிறகு தான், ‘நாய் குதறிய விவகாரம் நாடகமல்ல...அது ரியல்’ என்ற விவரத்தை அங்கிருந்தவர்களிடம் அவர் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ராதாகிருஷ்ணனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.