Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாய்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை: பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நாய்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட நாய்களை இணையதளம் வழியாக பதிவு செய்யும் ஒரு திட்டத்தை சென்னை மாநகராட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. இதன்படி, நாயின் புகைப்படம், நாய் உரிமையாளரின் புகைப்படம், தடுப்பூசி விவரங்கள் ஆகியவற்றை நாய் உரிமையாளர்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்த திட்டம் கட்டாயமாக்கப்படாததன் காரணமாக, பெரும்பாலானோர் இந்த திட்டத்தில் தங்கள் நாய்களை பதிவு செய்யவில்லை.

சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செல்ல நாய்கள் இருக்கின்றன. ஆனால், 11,200 நாய்கள் குறித்த விவரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தெரு நாய்களின் ஆதிக்கம் வேறு கொடிகட்டி பறக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நாய்களை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் என்பது வெறும் பெயரளவில்தான் இருக்கிறது.இதனால் தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

தற்போது நாய்களை கட்டுப்படுத்தக்கூட நீதிமன்றம் செல்லக்கூடிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கும் செயல். கடந்த 7 மாதங்களில் மட்டும் நாய் கடியினால் 3.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நாய்களை கட்டுப்படுத்தி ரேபிஸ் பாதிப்பினை தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.