*பணிகளை கமிஷனர் ஆய்வு
மதுரை : மதுரையில் மாநகராட்சி சார்பில் புதிதாக நாய்கள் காப்பகம் கட்டப்பட்டு வருகிறது.மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு வெள்ளைக்கல் மற்றும் செல்லூர் பகுதியில் செயல்படும் மாநகராட்சியின் நாய்கள் காப்பகத்தில் கருத்தடை மற்றும் ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மேலும் இப்பணிக்காக மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.31 தல்லாகுளம் டாக்டர் தங்கராஜ் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நாய்கள் காப்பகம் கட்டப்பட்டு வருகிறது.
இக்காப்பகத்தில் ஒரு கூண்டிற்கு இரு நாய்கள் வீதம் மொத்தம் 60 நாய்கள் அடைப்பதற்கு தனித்தனியாக கூண்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இக்காப்பகத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை மற்றும் ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசிகள் போடப்படும். மேலும் நாய்களை பராமரிக்க தேவையான கால்நடை மருத்துவர்களும் இங்கு பணியமர்த்தப்படுகின்றனர்.
இந்நிலையில், நாய்கள் காப்பகம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை தரமானதாகவும், அதேநேரம் விரைவாக முடித்து வழங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவிப்பொறியாளர் அமர்தீப் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.