Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊழல் தடுப்பு சட்ட திருத்தம்; அரசு ஊழியர்களை பாதுகாக்கிறதா? ஊழலுக்கு வழிவகுக்கிறதா? உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்

புதுடெல்லி: அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு முன் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கும் சட்டப்பிரிவு, நேர்மையான அரசு ஊழியர்களை பாதுகாப்பதா அல்லது ஊழலுக்கு வழிவகுப்பதா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. நாடு முழுவதும் ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2018ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, பிரிவு 17 ஏ(1) என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்படி, அரசு ஊழியர்கள் தங்களின் அலுவல் பணிகளை மேற்கொள்ளும்போது எடுக்கும் முடிவுகள் தொடர்பாக, அவர்கள் மீது விசாரணை தொடங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட தகுதியான அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்தச் சட்டப்பிரிவை எதிர்த்து, பொதுநல வழக்கு மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இந்த சட்டப்பிரிவானது, ஊழல் அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்துப் பாதுகாப்பதற்கு உதவுவதாகவும், நலன்சார் முரண்பாடுகளை உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் அமர்வு சில முக்கியமான கேள்விகளை எழுப்பியது. அதில், ‘குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையே அவருக்கு கடுமையான களங்கத்தை ஏற்படுத்திவிடும். இவ்விசயத்தில் நேர்மையான அதிகாரிகளையும் பாதுகாக்க வேண்டும். நாட்டில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறையைச் சமாளிக்க தேவையான நிலக்கரியை கொள்முதல் செய்த அதிகாரி மீது, அதைவிடக் குறைந்த விலையில் வாங்கியிருக்கலாம் எனக் கூறி வழக்கு தொடரப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபோன்ற அச்சங்கள் நேர்மையான அதிகாரிகள் மத்தியில் உள்ளது.

எனவே, விசாரணைக்கு முன்பாக தணிக்கை என்ற ஒன்று தேவை. அந்த தணிக்கையில் பாகுபாடு இருப்பதாக மனுதாரர் கருதினால் அது வேறுவிசயம்; ஆனால் தணிக்கை என்ற கருத்தையே கேள்விக்குள்ளாக்குவது வேறு’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘அச்சமற்ற நல்லாட்சி என்பது சட்டத்தின் ஆட்சியின் நடப்பதை உறுதி செய்வதாகும். நேர்மையான அதிகாரிகளை தேவையற்ற வழக்குகளின் அச்சுறுத்தலில் இருந்து இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிபடும் அரசு ஊழியர்களுக்கு இந்தச் சட்டப்பிரிவின் கீழ் பாதுகாப்பு இல்லை’ என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ‘கீழ்நிலை அரசு ஊழியர்கள் தனியாக ஊழலில் ஈடுபடுவதில்லை; உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகளின் உடந்தையை பயன்படுத்தியே அவர்கள் செயல்படுகிறார்கள்.

அவர்களே முன் அனுமதி வழங்கும் இடத்தில் இருந்தால், அது சிக்கலை உருவாக்கும். முன் அனுமதிக்கு பதிலாக, தீய நோக்கத்துடன் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை நீதிமன்றங்களே ரத்து செய்ய அனுமதிக்கலாம்’ என்று வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘இந்தச் சட்டப்பிரிவை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. இந்தச் சட்டம் நேர்மையற்ற அரசு ஊழியர்களை பாதுகாக்கலாம்; அதேநேரம் நேர்மையான அதிகாரிகளையும் காப்பாற்றுகிறது. ஆதாரமற்ற புகார்களிலிருந்து அரசு ஊழியர்களை பாதுகாப்பதே நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருந்தால், இந்தச் சட்டம் பாதுகாப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்’ என்று கூறி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.