Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்னை 20% அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனாவால் மூச்சுக் குழாய் தொடர்பான பிரச்னை 20 சதவீதம் அதிகரித்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் இருந்து கடந்த 2019ல் கொரோனா பரவ தொடங்கியது அங்கு அதிகமான மக்களுக்கு தொற்று ஏற்பட்டு அதிக உயிர்ப்பலி நிகழ்ந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவியது. இதனால் இந்தியாவிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

முதல் அலை, 2ம் அலை என அடுத்தடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு பரவியது. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, 2 டோஸ்கள் செலுத்தப்பட்டன. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில், தற்போது ஆசியாவில் கொரோனா தொற்று பரவி வருகிறது. குறிப்பாக சீனா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது பரவி வருவது கொரோனாவின் புதிய ஓமிக்ரான் துணை மாறுபாடான ஜெஎன் 1 வகை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை மொத்தம் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் முதற்கட்ட தகவல்களின்படி, கொரோனா தொற்று லேசாகப் பதிவாகியுள்ளதாகவும், இறப்பு ஏற்படும் அளவிற்கு தீவிரத்தன்மை இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 164 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதும், 112 பேர் குணமடைந்துள்ளதும் ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர், அதில் 32 பேர் குணமடைந்துள்ளனர். இது தவிர கேரளாவில் 69 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒருவர் இறந்துள்ளார். மேலும் கர்நாடகாவில் 8 பேரும், மகாராஷ்டிராவில் 44 பேரும், டெல்லியில் 3 பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களாக மூச்சுக் குழாய் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக அப்போலோ தொற்று நோய் மருத்துவர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: H1 N1 வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் வெவ்வேறு மரபணு மாற்றங்களை கொண்டவை, இருப்பினும் தற்போது பரவக்கூடியவை கொரோனா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரு நோய்களுக்கான அறிகுறிகளும் ஒன்றாக இருந்தாலும் அதனை பரிசோதனை செய்யும் பொழுது எந்த வகையான நோய் என்பது தெரிய வரும். H1 N1 வைரசாக இருந்தாலும் கொரோனா வைரஸ் ஆக இருந்தாலும் சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல்களை பாதிக்கும்.

குறிப்பாக காய்ச்சல், இருமல், சளி உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். தற்போது சுவையின்மை இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கிறது. மருத்துவமனைக்கு இந்த வகையான அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு எந்த வகையான பாதிப்பு என்பது குறித்து உடனடியாக கூறி விட முடியாது. அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பிறகு என்ன மாதிரியான பாதிப்பு என்று தெரிவித்து அதற்கு சிகிச்சை அளிக்கிறோம்.

இதனால் அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு H1 N1 வைரஸ், ஆர் எஸ் வி வைரஸ் மற்றும் கொரோனாவிற்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருகிறது. கடந்த மாதம் வரை H1 N1 வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது. தற்போது குறைந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. காய்ச்சல், மூச்சுக் குழாய் தொடர்பான பிரச்னைகளுடன் இருப்பவர்கள் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளனர். பொதுவாக வெயில் காலத்தில் வைரஸ்கள் அழிந்து விடும் என சொல்வார்கள் தற்போது அது மாறுபடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தமிழகத்தின் சுகாதாரத் துறை கட்டமைப்பு, அதாவது மருந்து, மாத்திரை, பரிசோதனை, படுக்கை என அனைத்து வசதிகளும் உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் அது விரிவுபடுத்தப்படும். கொரோனா போன்ற தொற்றுகள் ஏதேனும் அதிகமாக பரவ தொடங்கினால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.