Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தினசரி எவ்வளவு தண்ணீர் குடிப்பது நல்லது: மருத்துவர்கள் விளக்கம்

தாம்பரம்: உலகளவில் காலநிலை மாற்றம் என்பது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக சர்வதேச கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு கருத்தரங்குகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இதுவரையில் இல்லாத அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்த வெப்ப அலையால் ஏராளமானோர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனவே இத்தகைய வெப்பத்தை சமாளிக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால் தற்போது தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்த நேரத்தில் குழந்தைகளையும், பெரியவர்களையும் பாதுகாப்பது என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதிக வெப்பம் நிலவும் சூழலில் உடலில் நீர்த்தன்மை குறைந்து, பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தண்ணீர் ஏன் அதிகம் குடிக்க வேண்டும். இதய நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் எவ்வாறு தண்ணீரை எடுத்துக் கொள்வது, வயதானவர்கள், சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் பணியில் இருக்கும்போது எந்த அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம், வெயிலின் தாக்கத்தால் சிறுநீரக பாதிப்பு அதிகமாகுமா, தண்ணீர் அளவு உடலில் குறைந்தால் சிறுநீரகத்தில் எது போன்ற பிரச்னைகள் ஏற்படும், சிறுநீர் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் வருவது எத்தகைய எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வது போன்றவை குறித்து மருத்துவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையின் உள் மருத்துவம் மற்றும் நீரிழிவு நோய் மூத்த ஆலோசகர் டாக்டர் ஜிம்மி பிரபாகரன் கூறியதாவது: கோடை காலம் வந்து விட்டதால் நமது உடல் அதிக வெப்பத்திற்குள்ளாகி இருக்கும். கண்டிப்பாக அனைவருக்கும் இந்த கோடை காலத்தில் அதிகப்படியான வியர்வை வெளியேறும். நம்முடைய உடலை டிஹைட்ரேஷன் வராமல் தற்காத்துக்கொள்ள வேண்டும். அதை எப்படி, எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டால் கோடைகாலத்தில் வருகின்ற உடல்நல பிரச்னைகளை தடுத்து நாம் ஆரோக்கியமாக வாழலாம்.

கோடை காலத்தில் முக்கியமாக நமது உடலில் உள்ள வெப்பநிலையினால் உணர்வற்ற நீர் இழப்பு அதிகளவில் ஏற்படுவதால் உடலில் உள்ள நீர்ச்சத்து மிகவும் குறைவாகிவிடும். அதனால் ஹீட் எக்ஸாஷன், ஹீட் கிராம்ஸ் அதிகமாக கட்டுப்பாடு இல்லாமல் சென்றால் ஹீட் ஸ்ட்ரோக் போன்றவை எல்லாம் சாதாரணமாக வரக்கூடிய பிரச்னைகள். இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க கோடைகாலத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள், இளநீர், நீர்மோர் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பழங்களைப் பொறுத்தவரை ஆரஞ்சு, தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய் போன்றவற்றில் நீர்ச்சத்து அதிகம். எனவே இவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அதில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் வெப்பநிலை அதிகரிக்காமல் டிஹைட்ரேஷன் வராமல் தடுக்கலாம். டிஹைட்ரேஷன் வந்தால்தான் ஹீட் எக்ஸாஷன், ஹீட் கிராம்ஸ், ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகள் வருவதற்கு அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. ஹீட் எக்ஸாஷன், ஹீட் கிராம்ஸ், ஹீட் ஸ்ட்ரோக், டிஹைட்ரேஷன் வருவதை சிறுநீரகத்தை வைத்து எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

அதிகளவில் தண்ணீர் குடித்து உடலை ஹைட்ரேஷனுடன் வைத்திருந்தால் சிறுநீரை எளிதாக கழிக்க முடியும், எப்போது சிறுநீர் குறைவாக போகிறோமோ, மஞ்சள் நிறத்தில், பிரவுன் நிறத்தில் சிறுநீர் வந்தால் அவர்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதும், அவர்கள் தண்ணீர் அதிகளவில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு உள்ளவர்கள் கண்டிப்பாக அதிகளவில் தண்ணீர் குடித்து உடலை ஹைட்ரேடாக வைத்துக்கொண்டால் ஹீட் தொடர்பான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

யாரெல்லாம் அதிகளவில் தண்ணீர் குடிக்கக் கூடாது என்றால், மாரடைப்பு வந்த நோயாளிகள் அதிகளவில் தண்ணீர் குடிக்க கூடாது. ஏனென்றால் இருதய பாதிப்பு உள்ளவர்கள் அதிகளவில் தண்ணீர் குடித்தால் இருதய செயலிழப்பு, நுரையீரலில் தண்ணீர் சேர்ந்து சுவாசிப்பதில் பிரச்சனை வரும். இதேபோல சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு முகம், கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டிருக்கும்.

ஏற்கனவே அவர்கள் திரவ சுமையால் இருப்பார்கள், அவ்வாறு உள்ளவர்கள் கோடைகாலத்தில் அதிகளவில் தண்ணீர் குடித்தால் திரவ சுமை அதிகரித்து மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்படும். எனவே வயது முதியவர்கள், இருதய நோயாளிகள், சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள், கல்லீரல் செயலிழப்பு நோயாளிகள், உடலில் கை, கால்கள் வீக்கம் அதிகம் உள்ள நோயாளிகள் தண்ணீர் அதிகளவில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

அவர்கள் அவரவர் மருத்துவர்கள் ஆலோசனையின்படி தாங்கள் எவ்வளவு தண்ணீர் ஒரு நாளைக்கு குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அந்த அளவிற்கு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். மற்றபடி எந்த உடலில் பாதிப்புகளும் இல்லாதவர்கள் இந்த கோடைகாலத்தில் தங்களது உடலை டிஹைட்ரேஷனில் இருந்து காத்துக் கொள்ள ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை அதிகளவில் சாப்பிடலாம் இளநீர், நீர்மோர் போன்றவற்றை அதிகளவில் குடித்து வந்தால் இந்த கோடை காலத்தில் எந்த பாதிப்புகளும் இல்லாமல் நம்மை நாமே தற்காத்துக் கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் எம்.தீபக் கூறுகையில், பொதுவாக 60ல் இருந்து 65 கிலோ உடல் எடை கொண்டவர்கள், சாதாரண சிறுநீரக செயல்பாடு, சாதாரண உடல் நிலையில் உள்ளவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 1200 முதல் 1500 எம்எல் வரை சிறுநீர் கழித்தால் அவர்களுக்கு சீரான சிறுநீரக செயல்பாடு உள்ளது என அர்த்தம்.

1500 எம்எல் வரை சிறுநீர் வரவேண்டும் என்றால் அதற்கு நமது உடலுக்குத் தேவையான அளவிற்கு நீர்ச்சத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது கோடை காலம் என்பதால் சிறுநீர் கழிக்கும்போது அதன் அளவு குறைவாகும். அதை ஈடு செய்வதற்கு போதிய அளவு நீர் ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நீர்ச்சத்து அதிகமாக உள்ள பழ வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கோடைகாலத்தில் வியர்வையிலும், சுவாசக் காற்றிலும் 500 முதல் 750 எம்எல் வரை தண்ணீர் வெளியேற வாய்ப்புள்ளது.

அதை ஈடு செய்து ஒரு நாளைக்கு 1500 எம்எல் வரை சிறுநீர் கழிக்க அதிகளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இருதய பிரச்சனைகள், சிறுநீரக பிரச்னைகள் உள்ளவர்கள் அதிகளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கி இருப்பார்கள். ஆனால் 1500 முதல் 2000 எம்எல் வரை தண்ணீர் எடுத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. கோடைகாலத்தில் நீர் அளவு குறைவாக எடுத்தால் கிருமி தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. கோடைகாலத்தில் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்னைகள், சிறுநீரின் நிறங்களில்மாற்றங்கள் போன்றவை ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

* சருமத்தை பாதுகாக்க...

மலச்சிக்கல் இருக்காது, சிறுநீரகத்தில் நச்சுக்கள் சேராது, முகப்பரு மற்றும் தோல் பிரச்னைகள் ஏற்படாது, செரிமானம் சீராகும், உடல் வெப்பநிலை சீராக இருக்கும், ரத்த அழுத்தம் சீராக இருக்கும், உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பரமாரிக்கும், சிறுநீர்ப்பை தொற்று வாய்ப்பு இல்லை, உடல் திசுக்கள் மற்றும் உறுப்புகளை பாதுகாக்கும். சருமத்தை பாதுகாக்கும்.

* தாய்ப்பால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு

4 முதல் 8 வயது உள்ளவர்களுக்கு 5 முதல் 6 டம்ளர், 9 முதல் 13 வயது வரை உள்ளவர்களுக்கு 7 முதல் 8 டம்ளர், 14 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு 8 முதல் 11 டம்ளர், 19 வயது முதல் உள்ள பெண்களுக்கு 8 முதல் 10 டம்ளர், 19 வயது முதல் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 8 முதல் 13 டம்ளர் வரையிலும் தண்ணீர் குடிக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் மற்றும் பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் தேவைப்படும்.

* உடலில் ஏற்படும் அறிகுறிகள்

இருண்ட சிறுநீர், உலர்ந்த வாய், உலர்ந்த தோல், அதிக தாகம், மயக்கம் அல்லது சோர்வாக உணரும் நிலை, தலைவலி, தசைப்பிடிப்பு, சிறுநீர் அல்லது வியர்வை குறைவாக வருவது போன்றவை எல்லாமே நீரேற்றம் இல்லாததற்கான அறிகுறிகளே. கடுமையான நீரிழப்பு ஆபத்தானது, இந்நிலையில் குழப்பமான மனநிலை இருக்கும். இதயத்துடிப்பு அதிகரிக்கும், மூச்சுத்திணறல் ஏற்படும் மோசமான நிலையில் மயக்கமடைந்து அதிர்ச்சியை உண்டு செய்யலாம்.

* நீர்ச்சத்து குறைந்தால் ஏற்படும் பாதிப்பு

ஹீட் கிராம்ஸ்: இது காலில் உள்ள தசைகளில் மிகவும் வலி அதிகமாக இருக்கும். இது சரியாக தண்ணீர் குடிக்காததால் வரும் பிரச்னை. தண்ணீர் அதிகம் குடித்து வந்தால் இந்த பிரச்னை சரியாகிவிடும்.

ஹீட் எக்ஸாஷன்: உடலில் ஹீட் அதிகமாக, அதிகமாக உடலில் நீர் குறைவாகும் போது உடலில் அதிக அளவிலான சோர்வு, உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல் அடிப்பது போன்ற உணர்வு எல்லாம் வந்து அதிகளவில் சோர்வடைபவர்கள். இந்த ஹீட் எக்ஸாஷனை சரியாக கவனிக்காமல், தண்ணீர் ஒழுங்காக குடிக்காமல், சிறுநீர் கழிக்காமல் இருந்தால் அடுத்த கட்டமாக ஜீட் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

ஹீட் ஸ்ட்ரோக்: இதனால் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துதல், தலை சுற்றுதல், சுய நினைவு இழப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அவ்வாறு பாதிக்கப்படுபவர்களை ஒரு குளிர்ச்சியான பகுதிக்கு அழைத்துச் சென்று உடலில் உள்ள வெப்பநிலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால் அதிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க முடியும்.