பணத்துக்காக பெண் சிசுக்களை அழித்த மருத்துவர் கைது: ஆளில்லா வீட்டை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து கைவரிசை
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பணத்துக்காக பெண் சிசுக்களை அழித்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் சாமநகர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சுகுமாரை (60) கந்திலி போலீசார் கைது செய்தனர். சில தினங்களுக்கு முன்பு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணிகள் திருப்பத்தூர் வந்திருந்தனர். பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் இடம் தெரியாமல் நடுவழியில் விழித்து நின்றிருந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறிந்து கொள்ள வந்ததாக கூறினர்.
தொடர்ந்து இது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அதில் புரோக்கர்கள் கூறியதை அடுத்து 8 கர்ப்பிணி பெண்களும் திருப்பத்தூர் வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. ஆளில்லா வீடுகளை ஒருநாள் வாடகைக்கு எடுத்து ஸ்கேன் சென்டர் நடத்தி வருவதை புரோக்கர்கள் வாடிக்கையாக கொண்டது அம்பலமாகியுள்ளது. பெண் சிசுக்களை அழிக்க ஸ்கேன் சென்டர் நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில் விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். புரோக்கர்கள் 5 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். 5 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த மருத்துவர் சுகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.