Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்திய வம்சாவளி மருத்துவருக்கு 14 ஆண்டு சிறை: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவரான நீல் கே.ஆனந்த் (48), சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தில் மாபெரும் மோசடி மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டார். இவர், மருத்துவ ரீதியாகத் தேவையில்லாத மருந்துகளை ‘குட் பேக்ஸ்’ என்ற பெயரில் தொகுத்து, தனக்குச் சொந்தமான மருந்தகங்கள் மூலம் நோயாளிகளுக்கு விநியோகித்துள்ளார்.

இதற்காக சில காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து 2.4 மில்லியன் டாலருக்கும் அதிகமாகப் பெற்று மோசடி செய்துள்ளார். மேலும், இந்தத் தேவையற்ற மருந்துகளைப் பெற்றுக்கொள்ள நோயாளிகளை நிர்ப்பந்திப்பதற்காக, அவர்களுக்குச் சட்டவிரோமாக ஆக்சிகோடோன் என்ற போதைப்பொருளை வழங்கியுள்ளார். விசாரணையில், வெறும் 9 நோயாளிகளுக்கு மட்டும் 20,000க்கும் மேற்பட்ட ஆக்சிகோடோன் மாத்திரைகளை இவர் பரிந்துரைத்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த 23ம் தேதி தீர்ப்பளித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி சாட் எஃப். கென்னி, குற்றம்சாட்டப்பட்ட ஆனந்துக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.

ஆனந்த் தரப்பில், ‘நோயாளிகளின் மீதான இரக்கத்தாலேயே இவ்வாறு செய்தேன்’ என வைக்கப்பட்ட வாதத்தை நீதிபதி நிராகரித்தார். மேலும், ‘உங்களைப் பொறுத்தவரை, அவர்களின் வலிதான் உங்கள் ஆதாயமாக இருந்துள்ளது’ எனக் கடுமையாகக் குறிப்பிட்ட நீதிபதி, ‘பேராசையே டாக்டர் ஆனந்தின் செயல்களுக்குக் காரணம்’ எனத் தீர்ப்பளித்தார். 14 ஆண்டு சிறைத் தண்டனையுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 2 மில்லியன் டாலருக்கும் அதிகமாகவும், மோசடி செய்த பணத்தை அரசிடம் ஒப்படைக்கும் வகையில் 2 மில்லியன் டாலருக்கு மேலும் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.