சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொகிதீன், விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் அருணாச்சலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கூட்டாக
நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய பொருட்கள் இறக்குமதி மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பால் கடும் நெருக்கடியையும், பெரும் பாதிப்பினையும் சந்தித்துள்ளது பின்னலாடை தொழிலின் மையமான திருப்பூர். கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதோடு லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படப்போகும் பாதிப்புகளை முன்கூட்டியே முதல்வர் சுட்டிக் காட்டி நிவாரண நடவடிக்கைகளை ஒன்றிய பாஜ அரசு மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தும் எந்த நிவாரண நடவடிக்கையையும் ஒன்றிய பாஜ அரசு எடுக்கவில்லை. பாதிப்புகளை சரி செய்ய முன்வராமல் மவுனம் சாதிப்பது பின்னலாடை ஏற்றுமதியின் மையமான திருப்பூரை முடக்கும் அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு ஒன்றிய பாஜ அரசும் துணை போகிறதோ என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது. அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் உடனடி நிவாரண நடவடிக்கைகளை ஒன்றிய பாஜ அரசு எடுக்க வேண்டும்.
இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ஒன்றிய பாஜ அரசு வரி சலுகை உள்ளிட்ட நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அமெரிக்க வரி விதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் மட்டும் தொழிலாளர்களின் குரலாய் இருந்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றும் போராடும். திருப்பூரை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும் - உடனடி நிவாரண நடவடிக்கைகளை ஒன்றிய பாஜ அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும் ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” வருகிற 2ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் திருப்பூர் ரயிலடி அருகில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.