திமுகவுடன் வலிமையாக நாங்கள் இருக்கிறோம்; தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேசவில்லை: செல்வப்பெருந்தகை மறுப்பு
அவனியாபுரம்: திமுகவுடன் வலிமையாக நாங்கள் இருக்கிறோம். தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் தேவையா என தமிழ்நாடு முழுவதும் பேச்சாக உள்ளது. இதை ஆதரிக்கும் ஒரே கட்சி அதிமுக தான். மக்களுக்கு எதிராக செயல்படும் கட்சியாக அதிமுக உள்ளது.
டெல்லி எஜமானர்களின் உத்தரவின் கீழ் அதிமுக செயல்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னால் நின்று எஸ்ஐஆர் நிலை குறித்து கருத்து தெரிவிக்கிறோம். திமுக கூட்டணியில் நாங்கள் வலிமையாகவும், உறுதியாகவும் உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். ‘தவெகவுடன் கூட்டணியா?’ என செல்வப்பெருந்தகையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‘‘அதிகாரப்பூர்வமாக யாரும் பேசவில்லை. திமுக கூட்டணியில் வலிமையாகவும், உறுதியாகவும் நாங்கள் இருக்கிறோம்.
இதை யார் சொல்ல வேண்டுமென்றால் ராகுல்காந்தி, அகில இந்திய தலைவர் கார்கே, தமிழக பொறுப்பாளர் தினேஷ் ஜோடகர் சொல்ல வேண்டும். ரோட்டில் போகிற ஒருவர் சொல்வதை செய்தியாக வெளியிடுவது நல்லதல்ல. ஆதாரமான செய்திகளை வெளியிட வேண்டும். இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை’’ என்றார். பின்னர், சிவகங்கையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் ஒரு போதும் ஆட்சியில் பங்கு வேண்டும் என சொல்லவில்லை.
எனக்கு அந்த அதிகாரம் இல்லை. அகில இந்திய தலைமை தான் இதுகுறித்து முடிவெடுக்கும். எல்லோருக்கும் ஆசை இருக்கும். அகில இந்திய தலைமையின் வழிகாட்டுதல் இல்லாமல், அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டில் நான் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வேண்டும், இத்தனை சீட் வேண்டும் என கேட்டால் என்னை விட முட்டாள் இருக்க முடியாது. இந்தியா கூட்டணியில் எங்களுக்குள் எந்த பிணக்கும் இல்லை’’ என்றார்.
* எடப்பாடிக்கு பகிரங்க சவால்
‘எடப்பாடி பழனிசாமி புள்ளிவிபரத்தோடு பேசுகிறாரா அல்லது எழுதி கொடுத்து பேசுகிறாரா என்று தெரியவில்லை. நான் திருப்பெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ. கடந்த நாலரை ஆண்டுகளில் எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளன என்று எனக்கு தெரியும். இந்தியாவில் நிறைய அன்னிய முதலீடுகள் கொண்டு வரப்பட்டதில், முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் எவ்வளவு தொழிற்சாலைகள் வந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யட்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிகமாக இருந்தால் நான் எனது எம்எல்ஏ பதவியை துறக்கிறேன். திமுக ஆட்சி காலத்தில் அதிகளவில் கொண்டு வந்ததை நிரூபித்தால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என சவால் விடுக்கிறேன்’ என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.


