திருச்சி: 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ (எம்.பி.) மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய வைகோ; மனிதர்கள் வருவார்கள், சிலர் விலகிச் செல்வார்கள், ஆனால் என் பயணம் நிற்காது. என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்தது இல்லை; இனியும் விமர்சிக்க மாட்டேன். உங்களையும் என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.
திராவிட இயக்கத்தை வேரோடு பிடுங்கி எறிவோம் என அமித் ஷா கூறுவது பகல் கனவு. கடலை குடித்து விடுவேன் என்று கூறுவது போல் அமித் ஷா பேசியுள்ளார். பதவி பறிப்பு மசோதாவை கட்சி பேதமின்றி அனைவரும் எதிர்க்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டார்; சொல்லாதவற்றையும் நிறைவேற்றுகிறார் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு, குறுக்கே சுவர் எழுப்பி தடை செய்யும் ஒன்றிய அரசுதான் காரணம். 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.