முன்னாள் ஒன்றிய அமைச்சர், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மனைவி காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்பியின் மனைவியும், தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி பாலு (79) நேற்று காலை காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தி.நகர் ராமன் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், ‘‘ரேணுகா தேவி பாலு மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் ரேணுகா தேவி பாலு. அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு. எனசு ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.